கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான ஆர்.நல்லகண்ணு, 101, சென்னையில் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்புவதுமாக இருந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல் போன்ற திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன், சீமான், ஓ பன்னீர் செல்வம் போன்ற அரசியல் பிரமுகர்கள் தவிர்த்து திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, நாசர், செந்தில், மன்சூர் அலிகான், பாண்டியராஜன், பார்த்திபன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
நல்லகண்ணுவின் உடல் அவர் விரும்பியபடி சென்னை மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் வழங்கப்பட்டுள்ளது.
ரஜினி சொன்னது போல் காமராஜர், கக்கன் போன்றவர்களை இப்போது உள்ள பல தலைமுறைனர் நேரில் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை நல்லகண்ணு மூலம் பலரும் பார்த்திருப்பார்கள் என்பது உண்மை. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மை தவறாத மனிதர். நீங்கள் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்தது போதும், நிம்மதியாக ஓய்வெடுங்கள்.