உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் படத்தில் அபர்ணதி

அரசியல் படத்தில் அபர்ணதி

ஏசி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.பி.அசோக் குமார் தயாரிக்கும் படம் 'வெஞ்சென்ஸ்'. ராகுல் அசோக் இயக்குகிறார். அபர்ணதி சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளனர். பாடல்களுக்கு கார்த்திக்ராஜா இசை அமைக்க, அருண் ராஜ் பின்னணி இசை அமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ராகுல் அசோக் கூறும்போது, “நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் குறும்படம் இயக்கிய அனுபவத்தின் மூலம் இதை இயக்கி இருக்கிறேன். இது வேணி என்கிற ஒரு பெண்ணின் கதை. அவருடைய இயல்பான வாழ்க்கை ஓர் இடத்தில் ஆரம்பித்து எங்கு போய் நிற்கிறது என்பதுதான் படம். இது 2002ல் நடக்கும் அரசியல் கதை. கற்பனைக் கதைதான்.

இங்கு இருக்கிற சம்பவங்களுடன் தொடர்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, கற்பனையான ஒரு மாநிலத்தில் நடக்கும் கதையாக உருவாக்கி இருக்கிறோம். வேணி என்ற கதாபாத்திரத்துக்கு அபர்ணதி மிகவும் சரியாகப் பொருந்தி இருக்கிறார். அவருடைய நடிப்பு பேசப்படும். படத்தில் வருகிற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கும். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. மார்ச் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !