பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி
பொதுவாக சிவாஜி கவுரவ தோற்றங்களில் நடிப்பதில்லை. என்றாலும் முதன் முறையாக தனது ஆஸ்தான இயக்குனரான பி.ஆர்.பந்துலுவுக்காக கவுரவ தோற்றத்தில் நடித்தார். சிவாஜியின் வரலாற்று சிறப்பு மிக்க வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களை இயக்கியவர். இரண்டுமே தேசிய விருது பெற்ற படங்கள்.
பி.ஆர்.பந்துலு கன்னடத்தில் 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற படத்தை இயக்கினார். இதில் அவரே கதையின் நாயகனாக நடிக்கவும் செய்தார். அவருடன் சவுகார் ஜானகி, குலதெய்வம் ராஜகோபால், சரோஜாதேவி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
ஒரு நேர்மையான பள்ளி ஆசிரியரின் வாழ்க்கைதான் படம். அதில் அவர் வாசு என்ற திருட்டு மாணவனை திருத்தி மேற்படிப்புக்கு அனுப்பி வைக்கிறார். ஆசிரியர் ஓய்வு பெற்றதும் வறுமையில் வாடுகிறார். அவரால் மேல்படிப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாசு ஒரு போலீஸ் உயர் அதிகாரியாக வளர்ந்து ஆசிரியருக்கு ஏற்படும் ஒரு பிரச்னையை தீர்த்து வைக்கிறார். அந்த போலீஸ் அதிகாரியாக கவுரவ தோற்றத்தில் நடித்தார் சிவாஜி.
இந்த படம் 'எங்கள் குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழில் வெளியானது, 'பதி பந்துலு' என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. 1959ம் ஆண்டு ஏ.எல்.எஸ். புரொடக்சன்ஸ் 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்து வெளியிட்டனர். அதன் பின்னர் 1964ம் ஆண்டு 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற பெயரில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டது. இதிலும் அதே கவுரவ தோற்றத்தில் நடித்தார் சிவாஜி . அந்த வகையில் அவர் நடித்த முதல் மலையாளப் படம் இதுவே.