பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம்
சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற, மக்கள் செல்வாக்கினைப் பெருவாரியாகப் பெற்றிருந்த திரைப்பிரபலமாகவும், அரசியல் பிரபலமாகவும் வாழ்ந்து மறைந்தவர்தான் மக்கள் திலகம் எம் ஜி ஆர். நாடகத்திலிருந்து சினிமாவிற்குள் நுழைந்து, ஏறக்குறைய 15 திரைப்படங்களுக்கும் மேல் சிறு சிறு வேடமேற்று நடித்து, பின் 1947ம் ஆண்டு வெளிவந்த “ராஜகுமாரி” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றார். நாயகனான பின் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத திரை ஆளுமை என்ற இலக்கை அடைந்த பின், அவர் ஒப்புக் கொண்டு, பின் நடிக்க முடியாமல் கைவிடப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றில் ஒன்றுதான் இந்த “உடன்பிறப்பு” என்ற திரைப்படம்.
மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பிரண்ட் ராமசாமி, “காஞ்சனா பிக்சர்ஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, “உடன்பிறப்பு” என்ற படத்தை தயாரிக்க முற்பட்டார். எம் ஜி ஆர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தேவிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பும் வெகு விமரிசையாக ஆரம்பிக்கப்பட்டு, முதல் நாள் படப்பிடிப்பில் எம் ஜி ஆர், தேவிகா, எம் என் நம்பியார், நடிகவேள் எம் ஆர் ராதா, குட்டி பத்மினி மற்றும் பல நடிகர்கள் இடம் பெற்ற காட்சிகளும் படமாக்கப்பட்டன.
“அன்பு தந்த சீதனமே அடித்து விட்டேனா” என்று நடிகை தேவிகா, குட்டி பத்மினியை வைத்துப் பாடுவதுபோல் வரும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஆலங்குடி சோமு எழுதிய இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தவர் எஸ் எம் சுப்பையா நாயுடு. பாரமவுண்ட் ரெக்கார்டிங் திரையரங்கில் பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடலை பாடியிருந்தவர் பின்னணிப் பாடகி பி சுசீலா. பாடலைப் பதிவு செய்தவர் மறைந்த ஒலிப்பதிவு மேதை டி எஸ் ரங்கசாமி.
தபால்காரராக எம் ஜி ஆர் நடித்திருந்த இந்த “உடன்பிறப்பு” திரைப்படத்தின் தயாரிப்பு செலவு முழுவதும் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் கொடுப்பதாக ஒப்பந்தமும் செய்யப்பட்டு, படப்பிடிப்பு துரித கதியில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான நகைச்சுவை நடிகர் ப்ரணட் ராமசாமியின் திடீர் மறைவு, படத்தை மேலும் தொடர முடியாமல் செய்ததோடு, பாதியிலேயே கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. எம் ஜி ஆரின் வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் இணைய இருந்த இந்த “உடன்பிறப்பு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர இயலாமல் போனது, எம் ஜி ஆரின் ரசிகர்களான அவரது உடன்பிறப்புகளுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பே.