கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார்
மலையாள திரையுலகில் குணசித்திர நடிகர்களில் ஒருவராக பல படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் டினி டாம். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ள இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் மம்முட்டிக்கு டூப் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவரது மகன் ஆடம் சீம் என்பவர் கஞ்சா பயன்படுத்தியதாக திருப்பணித்துரா அருகில் உள்ள ஹில் பேலஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இவரது நண்பர்களான இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 2023ல் மலையாள திரை உலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு பரபரப்பு எழுந்த நிலையில் நடிகர் டினி டாம் வெளிப்படையாகவே படப்பிடிப்பு தளங்களில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மட்டுமல்ல இதனாலேயே தனது மகன் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்தாலும், அவனை தேடி வாய்ப்புகள் வந்தாலும் கூட இப்படி தவறான பழக்கங்களுக்கு மகன் ஆளாகி விடக்கூடாது என்று தனது மனைவி அவனது சினிமா வருகையை தடுத்து நிறுத்தி வைத்துள்ளார் என்றும் கூறினார்.
அந்த அளவிற்கு தன் மகன் தவறான வழியில் போய் விடக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த தந்தையின் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக தற்போது மகன் போதைப் பொருளான கஞ்சாவை பயன்படுத்தி போலீசாரிடம் சிக்கி உள்ளது மலையாள திரை உலகில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.