உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியனை தனக்கு பாட வைத்த சிவாஜி

பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியனை தனக்கு பாட வைத்த சிவாஜி


எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜிக்கு டி.எம்.சவுந்தர்ராஜன்தான் அதிகம் பாடி வந்தார். இந்நிலையில்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சினிமாவில் அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் “உன் உச்சரிப்பில் தெலுங்கு வாடை அடிக்கிறது. நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு வா” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் திருப்பி அனுப்பி விட்டார்.

பின்னர் மேடைகளில் பாடி தனது தமிழ் உச்சரிப்பை சரியாக்கிக் கொண்டு மீண்டும் வாய்ப்பு கேட்க வந்தபோது கே.வி.மகாதேவன் இசையில் 'அடிமைப்பெண்' படத்தின் பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது டி.எம்.சவுந்தர்ராஜன் பாட வேண்டிய 'ஆயிரம் நிலவே' பாடலுக்கு டிராக் பாடச் சொன்னார். பாடலை கேட்ட மிரண்டு விட்டார். அதை எம்ஜிஆருக்கு அனுப்பி வைத்தார் அதை கேட்ட எம்ஜிஆர் அந்த பையனையே பாட வையுங்கள் என்று கூறிவிட்டார்.

பாடல் ஹிட்டானது. மேலும் சில பாடல்களை எம்ஜிஆருக்கு பாடினார் பாலு. இந்த பாடல்களை கேட்ட சிவாஜி யார் இந்த பையன் என்று கேட்டு பாலுவை அன்னை இல்லத்திற்கு அழைத்து வரச் சொன்னார். எம்ஜிஆருக்கு பாடுகிற மாதிரி என் படத்திலும் பாட வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார், உடனே எம்.எஸ்.விஸ்வநாதனை அழைத்து எனது அடுத்த படத்தில் அந்த பையன் பாட வேண்டும் என்று கூறிவிட்டார்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கிய 'சுமதி என் சுந்தரி' படத்தில், சிவாஜிக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக, பாடல் பதிவுக்கு வராத சிவாஜி, அன்று ஸ்டுடியோவுக்கு வந்ததைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். சிவாஜி, பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, எனக்காக உன் பாணி மாற வேண்டும் என்று யாராவது சொல்லி குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்துக் கொள்கிறேன் என்று கூறினார். சிவாஜியின் இந்த வார்த்தைகள் பாலுவுக்குப் பெரிய தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தன.

பின்னர், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் சேர்ந்து 'பொட்டு வைத்த முகமோ' பாடலைப் பாடினர். 1971 ஏப்ரல் 14ம் தேதி வெளியான 'சுமதி என் சுந்தரி' பெரும் வெற்றி பெற்றது. படத்தின் பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தனது நடிப்பை மாற்றியதைக் கண்டு பிரமித்துப் போனார்கள் ரசிகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !