உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் 4ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

மார்ச் 4ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் கடந்த வாரம் பிப்ரவரி 26ம் தேதி உதய்ப்பூரில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தங்களது திரையுலக நண்பர்களுக்காக ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடத்த உள்ளார்கள் என்று ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதுமணத் தம்பதியினர் நேற்று வெளியிட்டுள்ளார்கள்.

ஐதராபாத்தில் மார்ச் 4ம் தேதி திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாகவும் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடத் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகத்தில் உள்ளவர்கள் மட்டுமே அதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மக்கள் அதிக அளவில் கூடுதலைத் தவிர்க்குமாறும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக் கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளதாலும், அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். மற்றவர்கள் அந்த இடத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

ரசிகர்களின் ஆசீர்வாதங்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருமண வரவேற்பு கொண்டாட்டத்தை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உங்கள் ஒத்துழைப்பைக் கேட்டுக் கொள்கிறோம் என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

தமிழில் விஜய் தேவரகொண்டா 'நோட்டா' படத்திலும், ராஷ்மிகா, கார்த்தியுடன் 'சுல்தான்' படத்திலும், விஜய்யுடன் 'வாரிசு' படத்திலும், தனுஷ் உடன் 'குபேரா' படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 4ம் தேதி தஞ்சையில் விஜய், அவரது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதனால், அவர் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. 'வாரிசு' பட நிகழ்வுகளின் போது தான் சிறு வயதிலிருந்தே விஜய் ரசிகர் என ராஷ்மிகா கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !