42 ஆண்டுகளாக நடிக்கிறேன், என் முதல் படம் எது தெரியுமா? : சின்னி ஜெயந்த்
ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள படம் வவ்வல்ஸ். இந்த படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ச் 13ம் தேதி படம் ரிலீஸ்.
படம் குறித்து சின்னி ஜெயந்த் பேசியதாவது, ‛‛இந்தப் படக்குழுவினர் மிகவும் தைரியமானவர்கள். கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். கதா சங்கமம் என்ற கன்னட படத்தில்தான் நான் முதலில் நடித்தேன். புட்டண்ணா கனகல் இயக்கினார். அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். அந்த படத்தை தமிழகத்தில் இந்த விழா நடக்கும் கமலா தியேட்டரில்தான் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது.
உலக ரசிகர்களின் தமிழக ரசிகர்கள் நன்றாக ரசிப்பார்கள். புருஸ்லீயின் ‛என்டர் தி டிராகன்' படம் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது. உலக அளவில் பெரிய வசூலை இங்கே அள்ளியது. தமிழக ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க வேண்டும். 5 கதைகளை விரிவாக எடுக்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளியான யூகி சேது இந்த படத்தில் நடித்து இருக்கிறார். அவர் ஒரு படம் இயக்கி வருகிறார்.
1980களில் சினிமா நடிப்பது கஷ்டம். நடிக்க சான்ஸ் கிடைக்காது. அப்படி கிடைத்தால் நடித்துக் கொண்டே இருக்கலாம். இப்ப, நடிக்க வாய்ப்பு டக்கென கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து நடிக்க, ஒழுக்கம், கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. நான் 42 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பல படங்களில் காதலுக்கு சப்போர்ட் செய்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் இந்த படத்தில் நானே காதலித்து இருக்கிறேன்'' என்றார்.