வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த்
'முண்டாசுபட்டி'யில் காமெடி நடிகராக அறிமுகமான முனீஷ்காந்த் பின்னர் குணசித்ர நடிகர் ஆனார். 'மிடில் கிளாஸ்' படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்தார். இன்று வெளியாகி உள்ள 'வடம்' படத்தில் நெகட்டிவ் ஷேட் உள்ள முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். தான் சினிமாவிற்கு வந்ததே வில்லனாக நடிக்கத்தான். வில்லனாக நடிக்கும் ஆசை இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் சினிமாவிற்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. முண்டாசுபட்டி படத்தில் வில்லன் கேரக்டர் கேட்டுதான் ஆடிசனுக்கு போனேன். ஆனால் இயக்குனர் காமெடி நடிகனாக்கினார். என்னை பார்த்து யார் சிரிப்பார்கள் என்று கேட்டேன். சிரிக்க வைக்கிறேன் என்று கூறினார். அப்போதுதான் ஒரு இயக்குனர் நினைத்தால் யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். அதனால் கடைசி வரை இயக்குனரின் நடிகராவே இருக்க முடிவு செய்து இப்போது வரை அப்படியே நடிக்கிறேன்.
'தாய்கிழவி' எனது கேரியரில் மிக முக்கியமான படம். இந்த படத்திற்கு பிறகுதான் என்னை முழுமையான நடிகனாக உணர்கிறேன். வில்லனாக நடிக்க வேண்டும் என்றுதான் சினிமாவிற்கு வந்தேன். 'புரூஸ் லீ' படத்தில் காமெடி கலந்த வில்லனாக நடித்தேன். அதுவும் ஒர்க் அவுட் ஆனது. என்றாலும் முழுமையான ஒரு வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருக்கிறது. என்கிறார் முனீஷ்காந்த்.