'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி
உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் படம் 'மாஸ்டர் பிளான்'. இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். திவ்யா ஜெகத் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அபி அத்விக் ஒளிப்பதிவு செய்கிறார். அலி மிர்சா இசை அமைக்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. படம் குறித்து ஹரி உத்ரா கூறும்போது “அரசியல்வாதிகளால் ஏற்படும் பிரச்னையில் நாயகன், நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லும் படம்.
முழுக்க முழுக்க நகைச்சுவை ஹூமர் பின்னணியில் நகரும் இப்படம், குடும்ப உறவுகளையும் சமூகச் சிக்கல்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தவுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் துவங்கி, விழுப்புரம், செஞ்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது” என்றார்.