விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அது குறித்து பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய்க்கு எதிராக கருத்து பதிவிட்டதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது. இந்த நிலையில் விஜய் பற்றி நான் அப்படியெல்லாம் பேசவே இல்லை என்று சொல்லி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அந்த பதிவில், ‛‛நடிகர் விஜயின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும் அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. விஜயை நான் அறிந்தது ஒரு மரியாதையான அமைதியான மென்மையான இணை நடிகராக மட்டுமே. அவருடைய தாயார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனக்கு எந்த தனிப்பட்ட அறிவும் இல்லை. சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விஜயின் அரசியல் வருகைக்கும் இப்போது பேசப்படும் தனிப்பட்ட விசயங்களுக்கும் தவறாக இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, மக்கள் தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் தனித்தனியாக பார்க்கத் தெரிந்தவர்கள் என்றுதான் நான் கூறினேன். மேலும் இது தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயம் பெரிதாக்கப்படுகிறது என்றும் சொன்னேன். இன்னும் ஒரு விஷயம் பெண்களின் நலன் குறித்து உண்மையாக அக்கறை இருப்பின் நீதிக்காக போராட வழியில்லாமல் சட்ட உதவியும் பொருளாதார ஆதரவும் இல்லாமல் அடுத்த வேலை உணவு கூட உறுதி இல்லாமல் வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் இதே அளவு கவனம் செலுத்தப்பட வேண்டாமா. இந்த அறிக்கை என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் ஏற்பட்ட தவறான புரிதலை சரி செய்ய மட்டுமே'' என்று கூறியுள்ளார்.