பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்
நவாப் டி எஸ் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் நடத்தி வந்த “மதுரை தேவிபால வினோத சங்கீத சபா” என்ற பாய்ஸ் நாடகக் கம்பெனியில் தனது கலைப்பணியை ஆரம்பித்து, ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கும் மேலாக நாடக உலகிலேயே பயணித்து வந்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், நல்ல எழுத்தாற்றல் உள்ளவராக இருந்ததால், திரைப்பட உலகிலும் ஒரு தலை சிறந்த வசனகர்த்தாவாக, ஒரு தேர்ந்த பாடலாசிரியாகத்தான் அவருக்கு முதல் அறிமுகம் கிடைக்கப் பெற்றது.
1954ம் ஆண்டு “சரவணபவா யூனிட்டி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம், படம் ஒன்றை எடுப்பதற்கு பல கதைகளை பரிசீலித்து வந்த வேளையில், “எதிர்பாராதது” மற்றும் “தம்பி” என்ற இரண்டு கதைகளை தெரிவு செய்து வைத்திருந்தனர் தயாரிப்புத் தரப்பினர். “எதிர்பாராதது” கதையை இயக்குநர் ஸ்ரீதரும், “தம்பி” கதையை இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனும் எழுதியிருந்தனர். இறுதியில் தயாரிப்புத் தரப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டது இயக்குநர் ஸ்ரீதரின் “எதிர்பாராதது” என்ற கதை.
தான் எழுதிய கதை தேர்ந்தெடுக்கப்பட்டதா? இல்லையா? என தெரிந்து கொள்வதற்காக தயாரிப்பு அலுவலகத்திற்கு வந்து, விபரம் அறிந்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனை, அங்கிருந்த இயக்குநர் ஸ்ரீதர் பார்க்க, அவரிடம் தனக்கு பாடல்களும் எழுத வரும் என்ற விபரத்தை இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் கூற, தான் இயக்கப் போகும் “எதிர்பாராதது” திரைப்படத்திற்கு பாடல் எழுதித் தாருங்கள் என ஸ்ரீதரும் அவரிடம் சொல்ல, “காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்” என்ற பாடலை எழுதித் தந்து ஒரு பாடலாசிரியாராக அறிமுகமானார் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.
1958ம் ஆண்டு “வீனஸ் பிக்சர்ஸ்” தயாரிப்பில் சிவாஜிகணேசன் இரட்டை வேடமேற்று நடித்திருந்த “உத்தமபுத்திரன்” திரைப்படத்திலும் பாடல்கள் எழுதியிருந்ததோடு, படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய ஸ்ரீதரின் வசனங்களை நடிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்ற பணியையும் செவ்வனே செய்து வந்தார் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன். “உத்தமபுத்திரன்” தயாரிப்பில் இருந்தபோதே, தனியாக வசனம் எழுதும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்ற கே எஸ் கோபாலகிருஷ்ணனை, நீயும் என்னைப் போல் வரவேண்டாமா? என சந்தோஷமாக வாழ்த்தி அனுப்பியும் வைத்தார் இயக்குநர் ஸ்ரீதர்.
“தெய்வப்பிறவி”, “நான் கண்ட சொர்க்கம்”, “படிக்காத மேதை”, “கைராசி”, “குமுதம்”, “அன்னை” என வரிசை கட்டி வந்த பிற இயக்குனர்களின் திரைப்படங்களில், இடம் பெற்றிருந்த இவரது வசனம் அன்றைய கலையுலகினரையும், ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்ததன் விளைவுதான் பின்னாளில் “சாரதா” என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து, குடும்ப உறவுகளின் மேன்மையையும், அழுத்தத்தையும் ஆழமாக தனது கலைப்படைப்புகளில் பதிவு செய்து, குடும்பங்கள் கொண்டாடி மகிழும் ஓர் குடும்பப்பட இயக்குநர் என்ற உயர்வினையும் எளிதாக எட்டிப் பிடித்திருந்தார் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.