‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த்
நெல்சன் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ‛ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‛ஜெயிலர் 2' என்கிற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பலரும் இந்த படத்திலும் இடம் பெறுகின்றனர். அந்த வகையில் முதல் பாகத்தில் ரஜினிகாந்த், யோகி பாபு கூட்டணியில் காமெடி காட்சிகள் ரசிக்கும் விதமாக படமாக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டாம் பாகத்திலும் யோகி பாபு, ரஜினி கூட்டணி களைகட்ட இருக்கிறதாம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் யோகிபாபு கூறும்போது, “முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரத்தை வித்தியாசமாக இயக்குனர் நெல்சன் வடிவமைத்துள்ளார். படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் என்னிடம் வந்து, யோகி என்னை பாருங்கள்.. எல்லாம் சரியாக இருக்கிறதா ஜெயிலர் படத்தில் இருந்தது போலவே என்னுடைய கெட்டப் சரியாக இருக்கிறதா என்று கேட்பார். இப்போது கூட அவர் ஏதோ முதல் படத்தில் நடிப்பது போன்று அவ்வளவு சின்சியராக தனது வேலையை செய்து வருகிறார்” என்று கூறியுள்ளார் யோகி பாபு.