உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு

நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், இந்த துறையின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று காலை நடந்தது. இதில் தமிழ் சினிமா குறித்து பல்வேறு முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

பின்னர், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன், மூத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், டி.சிவா உள்ளிட்ட பலர் கூட்டமாக அளித்த பேட்டியில் ''தமிழ் சினிமாவின் நலம் காக்க தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கொண்ட கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம் அடிக்கடி நடக்கும். இன்றைய கூட்டத்தில் தமிழ் சினிமாவின் தியேட்டர் வசூல் அதிகம் பாதிக்கப்படுவதால், இனி படம் வெளியான பின் 8 வாரங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும். அதற்கு தக்கப்படி தயாரிப்பாளர்கள ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அதேபோல், நடிகர்கள், நடிகைகள் இனி வியாபாரத்தில், லாபத்தில் பங்கு என்ற முறையில் சம்பளம் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளோம். ஓடிடியால் நிறைய பிரச்னை என்பதால் சினிமாவில் நடிப்பவர்கள் ஓடிடியில் நடிக்க கூடாது என்றும் முடிவெடுத்துள்ளோம். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இந்த குழு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து பல பிரச்னைகள் குழுவில் பேசப்பட உள்ளது என்றனர்.

இந்த கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, சத்யஜோதி தியாகராஜன், வினியோகஸ்தர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன், தியேட்டர் சங்க நிர்வாகி பன்னீர் செல்வம், வினியோகஸ் சங்க நிர்வாகி அருள்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !