மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு
மலையாளத் திரையுலகில் கடந்த 35 வருடங்களாக ஹீரோவாக, அதன்பிறகு ஒரு குணச்சித்திர நடிகராக குறிப்பிடத்தக்க நடிகராக அறியப்படுபவர் பிரேம்குமார். சமீபத்தில் இவர் மம்முட்டியுடன் தொடர்புபடுத்தி கேரள முதல்வரை விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது...
சில வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய நடிகர் (மம்முட்டியை தான் அவர் குறிப்பிடுகிறார்) கேரளாவில் உள்ள சூரல்மல என்கிற பகுதிக்கு பார்வையிட சென்றபோது அங்கே இருந்த ஆளும் அரசின் ஒரு முக்கிய பிரதிநிதி குறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அதுவரை நடிகரை ஆஹா ஓஹோ என புகழ்ந்த அந்த கட்சியினர் அதன்பிறகு அவர் மீது சைபர் தாக்குதல் தொடுத்தனர். ஆனால் இந்த விஷயம் கேரள முதல்வரின் கவனத்திற்கு சென்றதும் அப்படி சைபர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் அதற்காக அந்த நடிகரிடம் மன்னிப்பும் கேட்டார் உண்மையிலேயே பெருந்தன்மையான நிகழ்வு தான்.
ஆனால் இதேபோல தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை குறிப்பிட்டு அவர்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று நான் கூறிய ஒரே காரணத்திற்காக என்னை கேரள அரசின் திரைப்பட அகாடமி சேர்மன் பதவியில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கினார்கள். அது மட்டுமல்ல அக்கட்சியினரின் மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கும் ஆளானேன். ஆனால் அந்த பெரிய நடிகருக்கு செய்தது போல் முதல்வர் என்னிடமும் மன்னிப்பு வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல..
ஆனால் குறைந்தபட்சம் என் மீது சைபர் தாக்குதல் நடத்தியவர்களிடமாவது பாவம் அவரை விட்டு விடுங்கள் என்று ஒரு வார்த்தை கண்டித்து இருக்கலாமே... அந்த பெரிய நடிகருடன் ஒப்பிடும்போது நான் சாதாரண ஆள்தான். ஆனால் இங்கே எல்லாருக்கும் சம நீதி தானே கொடுக்கப்பட வேண்டும். முதல்வரை பொறுத்தவரை பெரிய மனிதர்களுக்கு ஒரு நியாயம்.. சாதாரண மனிதர்களுக்கு ஒரு நியாயம்” என்று தன் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பிரேம்குமார்...