பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி”
தமிழ் திரையுலகில் எம் ஜி ஆர் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டு, பின் ஏதோ சில காரணங்களால் படப்பிடிப்பினைத் தொடர முடியாமல் நின்று போன அவரது படங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த “பவானி” என்று பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படம். எம் ஜி ஆரின் அண்ணன் எம் ஜி சக்கரபாணி தயாரிக்க, மஸ்தான் இயக்குவதாக இருந்த இத்திரைப்படம் அறிவிப்போடு நின்று போனது. அதன் பின்னர் சில கால இடைவெளிக்குப் பின், மீண்டும் இதே கதையை “அரசகட்டளை” என்ற தலைப்போடு, எம் ஜி சக்கரபாணி தனது “சத்யராஜா பிக்சர்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்திருந்ததோடு, படத்தை இயக்கியும் இருந்தார்.
கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு மற்றும் முத்துக்கூத்தன் என மூன்று கவிஞர்கள் படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தனர். ஒரு முறை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் எம் ஜி ஆர் நடிப்பில் அப்போது உருவாகிக் கொண்டிருந்த “நாடோடி” திரைப்படத்திற்காக வாலி எழுதிக் கொடுத்த ஒரு பாடலை, எம் எஸ் விஸ்வநாதன் நிராகரிக்க, அடுத்த நாள் திரையிசைத் திலகம் கே வி மகாதேவனின் ரெக்கார்டிங்கிற்கு பாடல் எழுதச் சென்ற கவிஞர் வாலி, எம் எஸ் விஸ்வநாதனால் நிராகரிக்கப்பட்ட அந்தப் பாடலைக் காட்ட, அவர் உடனே அந்தப் பாடலை ஓகே செய்து, பாடல் பதிவும் இனிதே நிறைவு பெற்றது. அந்தப் பாடல்தான் “அரசகட்டளை” திரைப்படத்தில் வரும் “புத்தம் புதிய புத்தகமே, உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்ற பாடல்.
இதே படத்தில் எம் ஜி ஆர் பாடுவதாக வரும் ஒரு கொள்கை முழக்கப் பாடலை கவிஞர் வாலி எழுதித் தர, பாடலை வாங்கிப் பார்த்த எம் ஜி ஆருக்கு அதிர்ச்சி. ஆந்த அதிர்ச்சிக்குக் காரணம் கவிஞர் வாலி எழுதியிருந்த பாடலின் பல்லவிதான். “ஆண்டவன் கட்டளைக்கு முன் உன் அரசகட்டளை என்னாகும்” என்பதாக வாலி எழுதியிருந்தார். “ஆண்டவன் கட்டளை” என்பது சிவாஜிகணேசன் நடித்த திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு முன் இந்த “அரசகட்டளை” என்னாகும் என்பதுபோல் இருப்பதாக உணர்ந்து, திருப்தி கொள்ளாத எம் ஜி ஆர், பின்னர் அந்த குறிப்பிட்ட பாடலை கவிஞர் முத்துக்கூத்தனை வைத்து எழுத வைத்திருந்தார். அந்தப் பாடல்தான் “ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் ஆதவன் மறைவதில்லை, ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆடிவா! ஆடிவா!! ஆடிவா!!” என்ற பாடல்.
கவிஞர் வாலி திரையுலகில் பிரபலமாவதற்கு காரணமான எம் ஜி ஆருக்கு நன்றி சொல்லும் விதமாக கவிஞர் வாலி இந்தப் படத்தில் எழுதிய ஒரு பாடல்தான் “என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்” என்ற பாடல். இப்படி இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யம் மறைந்து, அதன் சுவையை மேலும் கூட்டி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தது. மேலும் படத்தின் இரண்டு நாயகியரில் ஒருவரான செல்வி ஜெயலலிதாவை “கவர்ச்சிக் கன்னி” என விளம்பரப்படுத்தியதும் இந்த “அரசகட்டளை” திரைப்படம்தான். 1967ம் ஆண்டு மே மாதம் திரைக்கு வந்த இத்திரைப்படத்தின் பாடல்கள், வசனங்கள், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருந்தும,; படம் வெளியீட்டின்போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதுதான் ஓர் கசப்பான உண்மை.