விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன்
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் விதமாக உருவாகியுள்ளது ‛காட்டான்‛ என்கிற வெப் சீரிஸ். ‛காக்கா முட்டை' பட இயக்குனர் மணிகண்டன் ‛ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி' போன்ற படங்களுக்குப் பிறகு இந்த படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். வரும் மார்ச் 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் இதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ‛பச்சைக்கிளி முத்துச்சரம், பையா அலெக்ஸ் பாண்டியன், டாக்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது காட்டான் வெப் சீரிஸில் இவர் சக நடிகரான விஜய்சேதுபதி குறித்து சிலாகித்துக் கூறியுள்ளார்.
விஜய்சேதுபதி பற்றி அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையும் எனது கதாபாத்திரமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது என்றாலும் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்பதைத்தான் நான் அதிகம் விரும்பினேன். விஜய்சேதுபதி படப்பிடிப்பு தளத்தில் எல்லாவற்றையும் நமக்கு வசதியாக பார்த்துக் கொள்வார். எளிதாக அணுகக் கூடியவர் அவரிடம் நீங்கள் எந்த ஒரு விஷயத்தை பற்றியும் பேச முடியும். அவருடன் ஒரு காட்சியில் நடிக்கும்போதும் எந்தவித டென்ஷனோ அல்லது ஒரு எதிரி மனப்பான்மையுடனோ நடிக்க வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் நடிக்க முடியும். அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது ரொம்பவே எளிதானது. இதுபோன்ற ஒரு படக்குழுவினரு இணைந்து பணியாற்றுவதை தான் என்னைப் போன்ற நடிகர்கள் ரொம்பவே விரும்புவார்கள்” என்று கூறியுள்ளார்.