ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‛ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் ‛ஜெயிலர் 2' என்கிற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க, மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக தமிழில் வெளியான ‛வீரதீர சூரன்' படத்தில் இவர் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
‛ஜெயிலர் 2' படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் என்னிடம் உங்களுடைய வீரதீர சூரன் படம் பார்த்தேன். அருமையாக நடித்திருந்தீர்கள் என்று பாராட்டினார். அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என்ன ஒரு சிக்கல் என்றால் அவருடன் இணைந்து நடிக்கும்போதெல்லாம் முந்தைய படங்களில் அவர் நடித்திருந்த காட்சிகள் தான் என் மனக்கண்ணுக்குள் வந்து செல்லும். இந்த உணர்வை மறைத்து என்னுடைய வசனங்களை பேசுவது ஒரு சவாலாகவே இருந்தது” என்று கூறியுள்ளார்.