3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ?
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் மூலம் கடந்த ஓரிரு மாதங்களில் சிக்கலில் உள்ளது அதன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ். தணிக்கை சான்றிதழ் கிடைக்கப் பெறாததால் அதன் வெளியீடு கேள்வியாக இன்னமும் தொடர்ந்து வருகிறது.
அந்நிறுவனத்தின் மற்றொரு இணை தயாரிப்பான 'டாக்சிக்' படம் இந்த வாரம் மார்ச் 19ம் தேதி வெளியாவதாக இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக படத்தைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார்கள்.
அதற்கடுத்து 'கேடி தி டெவில்' படத்தையும் தயாரித்து வருகிறார்கள். இந்த மூன்று படங்களுமே பான் இந்தியா வெளியீடாக வர உள்ளது. இந்த மூன்று படங்களில் மட்டுமே அந்நிறுவனம் 1000 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
'ஜனநாயகன், டாக்சிக்' ஆகிய இரண்டு படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இருந்தாலும் அந்தப் படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் தயாரிப்பு நிறுவனத்திற்கு நிதிச்சுமையை அதிகரித்துள்ளது. படம் வெளிவந்து அதிலிருந்து அவர்கள் சுமை இல்லாமல் போக வேண்டும் என திரையுலகில் எதிர்பார்க்கிறார்கள். சமீப காலங்களில் சில பான் இந்திய படங்களின் எதிர்பாராத தோல்வி இந்த ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் பான் இந்தியா படங்களில் பல கோடி முதலீடு செய்யப்படுகிறது. அவை முதலீட்டை விட இரண்டு மடங்குக்கும் மேல் வசூலித்தால் மட்டுமே லாபத்தைப் பெற முடியும்.