இரண்டாவதாக பெண் குழந்தை பெற்ற பூர்ணா ; பிறந்த நாளன்றே பெயரும் சூட்டினார்
தமிழில் பரத் நடித்த ‛முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. அதைத்தொடர்ந்து தமிழில் குறிப்பிடத்தக்க படங்களில் கதாநாயகியாக பின்னர் வில்லியாக என நடித்துள்ளார். அதே சமயம் மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்கிற தன்னுடைய ஒரிஜினல் பெயரிலும் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு திருமண மோசடியில் சிக்க இருந்தவர் கடைசி நேரத்தில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தார்.
அதன் பிறகு கடந்த 2022ல் துபாயில் வசிக்கும் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2023ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது மூன்று வருடங்களுக்கு பிறகு ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகியுள்ளார் பூர்ணா. நேற்று அதிகாலை குழந்தை பிறந்த நிலையில் அன்றைய தினமே தனது பெண் குழந்தைக்கு துவா ஜமீலா என்று பெயர் சூட்டியும் உள்ளார் பூர்ணா.