உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல்

10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல்


மலையாளத் திரையுலகில் கேரள பாக்யராஜ் என்று அழைக்கப்படும் அளவிற்கு குடும்ப கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியும் நடித்தும் பெயர் பெற்றவர் இயக்குனர் பாலச்சந்திரன் மேனன். 1980களில் இருந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தமிழில் சிவாஜி கணேசன், பாண்டியராஜன் நடித்த ‛தாய்க்கு ஒரு தாலாட்டு' என்கிற படத்தையும் இயக்கி உள்ளார். அதன் பிறகு 1993ல் இவர் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‛அம்மையான சத்தியம்' என்கிற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமல் ரொம்பவே விரும்பியதாகவும் அதன் பிறகு தமிழில் படப்பிடிப்பு நடைபெற்றபோது பத்து நாட்கள் படப்பிடிப்புடன் அந்த படம் நின்று போனது என்றும் அதற்கு காரணம் என்ன என்றும் தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து உள்ளார் பாலச்சந்திர மேனன்.

இது குறித்து அவர் கூறும்போது, “அம்மையான சத்தியம் படத்தை பார்த்ததும் கமல் தமிழில் அதை ரீமேக் செய்து நடிக்க விரும்பினார். ‛கண்டேன் சீதையை' என்கிற பெயரில் எர்ணாகுளத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கி பத்து நாட்கள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக சென்றது. அந்த சமயத்தில் கிரேசி மோகன் உள்ளிட்ட கமலின் நண்பர்கள் பலர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவருடன் தங்கி பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருந்து தான் கமலின் மனது மாறியது.

அம்மையான சத்தியம் படத்தில் ஒரு பெண், தன்னுடைய எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக தன்னை ஒரு ஆண் போல வேடமிட்டு பாதுகாத்துக் கொள்வதாக கதை உருவாக்கப்பட்டு இருந்தது. அப்போது கமலின் நண்பர்களில் ஒருவர் என்னிடம் வந்து, கமல் இதே போல தானும் பெண் வேடமிட்டு ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறார் என்று சொன்னார். அதன் பிறகு கமல் இந்த படத்தில் இருந்து வெளியேறினார். அத்துடன் படம் அப்படியே நின்று போனது. ஆச்சரியமாக அவருக்கு இந்த படத்தின் மூலம் தோன்றிய யோசனை தான் அதன் பிறகு 1996ல் அவர் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் உருவாக காரணம் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

RRR, Nellai
2026-03-17 10:08:18

பிறமொழி படங்களை தழுவித் தழுவி படம் எடுப்பதில் வல்லவர் கமலஹாசன். கமல் படம் எதுவுமே சொந்தமாக கதை யோசித்து எடுக்கப்பட்டதல்ல... எல்லாமே காப்பியோ காப்பிதான் ...


Columbus
2026-03-16 13:00:12

Avvai Shanmugi was based on Hollywood film Mrs Doubtfire starring Robin Williams.