'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர்
ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் அவரை வைத்து 'காலா' என்கிற படத்தையும் இயக்கினார் பா ரஞ்சித். இந்த படம் மும்பை தாராவியை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் ரஜினி தமிழர் நலன் காக்கும் ஒரு தாதாவாகவும் நானா படேகர் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இன்னொரு போலீஸ்காரர் வேடத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான பங்கஜ் திரிபாதியும் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே மீர்சாபூர், கிரிமினல் ஜஸ்டிஸ், கேங்ஸ் ஆப் வாசிப்பூர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் என்றாலும் காலா படத்தில் சில நிமிடங்களே வந்து செல்லும் ஒரு போலீஸ்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த படப்பிடிப்பின் போது அவரை அங்கே பார்த்த நானா படேகர், இங்கே என்ன பண்ணுகிறாய் என்று அவரிடம் கேட்டுள்ளார். இந்தப் படத்தில் ஒரு சிறிய போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறியதும் எவ்வளவு பெரிய நடிகன் நீ, எதற்காக இந்த சின்ன ரோலில் நடிக்கிறாய் என்று கடிந்து கொண்டாராம். அதற்கு பங்கஜ் திரிபாதி ரஜினி அண்ணா, நீங்கள் இருவருமே இந்த படத்தில் நடிக்கிறீர்கள்.. உங்களுடன் நடிப்பதற்காக தான் இந்த படத்தில் இந்த சிறிய கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டேன் என்று பதில் கூறியுள்ளார்.
அதற்கு நானா படேகர் எங்களுடன் நடிப்பதால் எல்லாம் நீ பெரிய ஆள் ஆகிவிட முடியாது. ஏற்கனவே நீ பெரிய ஆள் தான். அதனால் இது போன்ற சின்ன கதாபாத்திரங்களை இனிமேல் தவிர்க்க வேண்டும். அப்படி ஏதாவது நடித்தால் உன்னை நிச்சயமாக அடிப்பேன் என்று உரிமையுடன் கண்டித்தாராம் நானா படேகர். சமீபத்திய பேட்டி ஒன்றில் நானா படேகரே இந்த தகவலை கூறியுள்ளார்.