ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ்
மலையாளத்தில் கடந்த 2017ல் ஜெயசூர்யா நடிப்பில் 'ஆடு' என்கிற படம் வெளியானது. ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்க, 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மிதுன் மானுவேல் தாமஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 'ஆடு 2' என்கிற பெயரில் 2017ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் 'ஆடு 3' என்கிற பெயரில் தயாராகி, வரும் மார்ச் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இடம் பெற்றுள்ளதாகவும் அதில் நடிகை நிகிலா விமல் ஆடி இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.
ஆனால் இதனை மறுத்த இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் ஐட்டம் பாடல் எல்லாம் இல்லை, அது ஒரு கிளப் நடன காட்சி என்றும் ஆனால் அதில் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல, வேறு ஒரு நடிகை என்றும் சஸ்பென்ஸ் வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து சுல்தான் என்கிற அந்த பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக அந்த பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பவர் நடிகை வேதிகா. இந்த பாடலில் நடிகர் விநாயகனும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.