உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி”

பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி”


ஒரு மேடை நாடகக் கலைஞனாக தனது கலைப் பயணத்தை ஆரம்பித்து பின் திரைக்கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மையோடு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் திரையுலகையே தன்வசப்படுத்தி வைத்திருந்த ஒரு திரை ஆளுமையாகப் பார்க்கப்பட்டவர்தான் இயக்குநர் கே பாலசந்தர். இவரது “மெழுகுவர்த்தி” என்ற நாடகத்திற்கு தலைமை தாங்கச் சென்ற எம் ஜி ஆர், கே பாலசந்தர் போன்ற இளைஞர்கள் திரைப்பட உலகிற்கு தேவை. அவர் விருப்பப்பட்டால் அவரை நானே அழைத்துச் செல்வேன் என்ற சொன்னதோடு மட்டும் நின்றுவிடாமல், தனது “தெய்வத்தாய்” படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்தார்.

கே பாலசந்தரின் “ராகினி ரெக்ரியேஷன் குழு”வில் நடிக்கத் தொடங்கியிருந்த நடிகர் நாகேஷை முக்கிய கதாபாத்திரமாக நடிக்க வைத்து, கே பாலசந்தர் எழுதிய ஒரு நாடகம்தான் “நீர்க்குமிழி”. இந்த நாடகம் அரங்கேற்றமான அன்றே ஒரு பரபரப்பான பேசுபொருள் ஆகும் அளவிற்கு இந்நாடகம் ஓர் உயர்ந்த நிலையையும் பெற்றிருந்தது. இந்தச் சூழலில் திரைக்கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முகங்களோடு சில வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த ஏ கே வேலன் அவர்களின் அறிமுகமும் கிடைக்கப் பெற்றார் இயக்குநர் கே பாலசந்தர்.

“நீர்க்குமிழி” நாடகத்தைப் பார்த்தேன். இந்நாடகத்தை அப்படியே சினிமாவாக எடுக்கலாம் என யோசிக்கின்றேன். படத்திலும் நாகேஷே நாயகன். படத்தை நீங்கள்தான் இயக்கப் போகின்றீர்கள் என ஏ கே வேலன் இயக்குநர் கே பாலசந்தரைப் பார்த்து சொன்னவுடன் அவருக்கு பயம் தொற்றிக் கொண்டது. தன்னால் முடியுமா? ஒரு உதவி இயக்குநராகக் கூட யாரிடமும் நாம் பணிபுரிந்ததில்லையே? எப்படி 'ஷாட்', 'கட்' சொல்வது என ஆயிரம் சந்தேகங்கள் மின்னலாக தோன்றி மறைந்தாலும், ஒரு வாரத்திற்குப் பின் தனது முடிவை சொல்வதாக இயக்குநர் கே பாலசந்தர் ஏ கே வேலனிடம் சொல்ல, அதற்கு ஏ கே வேலன் நானும் ஒரு எழுத்தாளனாகத்தானே இருந்தேன். முதலில் ஒரு படத்தை இயக்கினேன். அது பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது எனக்கு.
அதன் பின்பு என்னையும் இயக்குநர் என கூப்பிட ஆரமிபிச்சுட்டாங்க. நாடகத்தை மேடையிலே ப்ரசண்ட் பண்ணுவது போல், அதை அப்படியே பிலிமில் ப்ரசண்ட் பண்ண வேண்டியதுன்னு என நினைத்துக் கொள்ள வேண்டியதுதானே என ஏ கே வேலன் சொல்ல, அவர் கேட்டிருந்த அந்த ஒரு வார இடைவெளியில், ஒரு குறிப்பிட்ட காட்சிக்கான வசனத்தை க்ளோசப்பிலே சொன்னா நல்லாயிருக்கும் அப்படிங்கிறது கூடவா நமக்கு தெரியாமல் போய்விடும் என்று நினைத்து தனது சம்மதத்தை தெரிவித்தார் இயக்குநர் கே பாலசந்தர்.

“நீர்க்குமிழி” நாடகத்தை அப்படியே படமாக பண்ணினார். அதுவரை யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமலிருந்த அவர் தன்னிச்சையாகவே அந்தப் படத்தை இயக்கினார். ஏ கே வேலன் தயாரிப்பில், 1965ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த இந்த “நீர்க்குமிழி” திரைப்படம்தான் பின்னாளில் 100 திரைப்படங்களை இயக்கி, ஒரு இமாலய சாதனையைப் புரிந்து, 'இயக்குநர் சிகரம்' என்ற பெருமையை இயக்குநர் கே பாலசந்தருக்குப் பெற்றுத் தர, காரணமாயிருந்த கலைப்படைப்பாகவும் இருந்தது என்றால் அது மிகையன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !