நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம்
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ''முதல்வர் ஸ்டாலின் உங்கள் கனவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் என்கிறார், எனக்கு நயன்தாரா வேண்டும், கனவை நிறைவேற்றுவாரா'' என பேசியிருந்தார்.
அரசியல் மேடையில் நடிகை ஒருவரை நாகரீகமற்ற வகையில் உட்படுத்தி பேசியதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அத்துடன், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் களத்தில் கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டி இருக்கிறது. ஆனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சபை நாகரீகத்தை விட்டொழித்து சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது.
சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்; இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? தங்களிடம் இருந்து மன்னிப்பும், இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கிற உத்தரவாதம் தர வேண்டும் என கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருத்தம்
இதற்கிடையே தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சிவி சண்முகம். அதில், ‛‛நயன்தாராவின் பேச்சு தவறுதலாக உச்சரிக்கப்பட்டுவிட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். நான் சொல்ல வந்த கருத்து வேறு, ஆனால் தவறுதலாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுவிட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.