எந்த நேரத்தில் படத்தை தொடங்கினார்களோ? விஜயின் ஜனநாயகன் படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் தவிக்கிறது. குறிப்பாக சென்சார் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. டிசம்பர் மாதமே படத்தை சென்சார் போர்டு குழுவினர் பார்த்துவிட்டாலும், சான்றிதழ் தரவில்லை. படத்தில் மதம், ராணுவம், அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சை காட்சிகள் இருப்பதால், ரீ சென்சாருக்கு பரிந்துரை செய்தார்கள்.
ஆனால், ஜனவரி 9ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதால் ஐகோர்ட்டுக்கு சென்றது ஜனநாயகன் பட நிறுவனம். ஆனால், சட்டசிக்கல் இழுத்தடிக்க, சுப்ரீம் கோர்ட்டுக்கும் சென்றார்கள். அங்கேயும் தீர்வு கிடைக்கவில்லை. மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு நடந்தது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பது போல தெரியவில்லை. அதனால், வழக்கை வாபஸ் பெற்றது ஜனநாயகனை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம்.
இதனால், மார்ச் 9ம் தேதி ஜனநாயகன் படத்தை ரீ சென்சாருக்காக சென்சார் போர்டு உறுப்பினர்கள் பார்ப்பதாக இருந்தது. இன்றே தீர்வு கிடைத்துவிடும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்க, அன்றைய தினம் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லி, ரீ சென்சாரை ரத்து செய்தனர் அதிகாரிகள். இது படக்குழுவுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
கடைசியில் நேற்று மார்ச் 17ம் தேதி சென்னையில் ரீ சென்சார் நடக்கும் என்று கூறப்பட்டது. நேற்றும், இன்று சான்றிதழ் கிடைத்துவிடும் அல்லது நல்ல வழி பிறக்கும் என பட நிறுவனம் ஆர்வமாக இருந்தது. ஆனால், நேற்று படக்குழுவை சென்சார் போர்டு அழைக்கவில்லை. இதனால், நேற்றும் ரீ சென்சார் நடக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று புது தகவல் கசிகிறது. சென்னையில் நேற்று ரீ சென்சார் நடக்கவில்லை. ஆனால், மும்பையில் நடந்து இருக்கிறது. ஆனாலும், ரீ சென்சாருக்குபின் சான்றிதழ் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவெடுக்கவில்லை. படத்தில் சில அரசியல் காட்சிகள் இருப்பதால், தமிழகத்தில் தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால், தவெக தலைவர் விஜய் நடித்து இருக்கும் ஜனநாயகன் படத்தை, இந்திய தேர்தல்கமிஷன் பார்க்க வேண்டும். அவர்கள் பார்த்துவிட்டு தடையில்லா சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் பக்கம் கை காண்பித்துவிட்டார்களாம். இதனால்,தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பார்த்த பின்னரே ஜனநாயகனுக்கு சான்றிதழ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜனநாயகன் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். இப்போது தேர்தல் கமிஷன் படம் பார்த்துவிட்டு என்ன சொல்லுமோ? சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்குமோ? ரீ சென்சாரில் எத்தனை கட், எத்தனை மியூட், எத்தனை இடங்கள் நீக்கப்பட்டுள்ளதோ? அங்கே என்ன சான்றிதழ் கிடைக்கிறதோ? ஏ சான்றிதழ் என்றால் வியாபாரம் பாதிக்குமே? என்று படக்குழு பதைபதைப்பில் இருக்கிறதாம்.
கிட்டதட்ட 3 மாதங்களாக சென்சார் சான்றிதழுக்காக அலைந்து கொண்டு இருக்கிறது ஜனநாயகன் படக்குழு. எப்போது கிடைக்கும் என்றும் உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. இதுவரை இந்த பிரச்னை குறித்து ஹீரோ விஜய் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த மாதம் சென்சார் பிரச்னைகள் முடிந்து, சான்றிதழ் கிடைத்தாலும் தேர்தல் முடிவுகள் வந்தபின் மே 7ம் தேதி தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். அதுதான் நல்லது என்று தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் நினைக்கிறார்களாம்.