'நூறு சாமி'யில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இயக்குனர் சசி, நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'நூறு சாமி'. இதனை விஜய் ஆண்டனியே தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அவருடன் சுவாசிகா, அஜய் திஷான், கருணாஸ், லிஜோ மோல் ஜோஸ், காவ்யா அனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பாலாஜி ஸ்ரீராம் இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி இருப்பதுடன் இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
'பூ' படத்திற்கு பிறகு சசி இயக்கி உள்ள கிராமிய பின்னணியிலான கதை. இதில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையை பற்றி பேசுகிறார். கரும்புக்கு சரியான விலை கிடைக்காமல் சர்க்கரை ஆலைகளுக்கு மலிவான விலைக்கு விற்க வேண்டிய நிலை. கரும்பு ஆலைகளின் சதி, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் குறித்து இதில் பேசுகிறார் சசி. கரும்பு விவசாயியாக விஜய் ஆண்டனியும், அவரது மனைவியாக சுவாசிகாவும் நடிக்கிறார்கள்.
“இரத்தம், வியர்வை மற்றும் பிணைப்புகளின் பயணம். இதுதான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை” என படம் பற்றி குறிப்பிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.