உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் : குவியும் பாராட்டுகள்

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் : குவியும் பாராட்டுகள்

98வது ஆஸ்கர் விருது விழாவில் 'சின்னர்ஸ்' படம் அதிகமான விருதுகளைத் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமாக 16 பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த இத்திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ் பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்கிற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார்.

விருதை பெற்ற அவர் இதுகுறித்து பேசும்போது “பெண்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும். உங்களின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தருணங்கள் சாத்தியமில்லை. உங்களின் அந்த ஆதரவால்தான் இது நடந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியொரு சாதனையைச் செய்ய ஒரு பெரிய கூட்டமே உழைக்க வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களில் நான் கற்றுக்கொண்டேன். ஆனால், இது இனி என்னைப் பற்றியது மட்டுமல்ல. இது அதையும் தாண்டிய மிகப்பெரிய விஷயம். பெண்களுக்காக, சிறுமிகளுக்காக இந்த விருதை வெல்ல வேண்டும் என நான் விரும்பினேன் என்றார் .



அர்கபாவ், கலிபோர்னியாவில் பிறந்தார். பூர்வீகம் பிலிப்பைன்ஸ். பிலிப்பைன்சை ஜப்பான் ஆக்கிரமித்தபோது அங்கிருந்து கலிபோர்னியாவுக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. தனது தாத்தாவால் வளர்க்கபட்டார். தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்ற வசதியாக ஒளிப்பதிவை கற்றுக் கொண்டவர் அதில் தன் திறமையை காட்டி அதன் மூலம் சினிமா ஒளிப்பதிவாளர் ஆனார்.

மார்வெல் ஸ்டுடியோஸின் 'லோகி', 'ப்ளாக் பேந்தர், வகாண்டா பாரெவர்' உள்ளிட்டவை இவர் ஒளிப்பதிவு செய்த முக்கியமான படங்கள். இதுமட்டுமல்ல, ஐமேக்ஸ் பிலிம் கேமராவின் உயர்ரக வகையைப் பயன்படுத்திய முதல் பெண் ஒளிப்பதிவாளர் இவர்தான் என்கிற பெருமையும் இவருக்கு இருக்கிறது. ஆஸ்கர் விருது வென்றுள்ள அர்கபாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !