உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள நடிகர் சங்கத்திலிருந்து ரேவதி, பத்மபிரியா விலகல்

மலையாள நடிகர் சங்கத்திலிருந்து ரேவதி, பத்மபிரியா விலகல்

‛அம்மா' என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரேவதி, பத்மபிரியா ஆகியோர் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

மலையாள திரையுலகில் சில ஆண்டுகளாக பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை அதிகரித்தது என்ற குற்றச்சாட்டு எழ அதுதொடர்பாக ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில நடிகர்களும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதாகினர். இந்த அறிக்கைக்கு பிறகு அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவினரும் ராஜினாமா செய்தனர். அதையடுத்து நடந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று முதல் பெண் தலைவராக தேர்வானார்.

ஆனாலும் இந்த சங்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள், குழப்பங்கள் நிலவுகின்றன. திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்த அன்சிபா ஹாசன், இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சில பிரச்னைகளால் இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து தலைவர் பதவி வகித்த ஸ்வேதாவும் ராஜினாமா செய்வதாக அறிவித்து பின்னர் தனது முடிவை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் இந்த சங்கத்திலிருந்து விலகுவதாக நடிகைகள் ரேவதி, பத்மபிரியா ஆகியோர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அம்மா (AMMA) அமைப்பில் தற்போது நடைபெற்று வரும் சர்ச்சைகளில் இது ஒரு புதிய அத்தியாயமோ என்று தயவுசெய்து நினைக்க வேண்டாம். எங்களின் ராஜினாமா அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த பத்து வருடங்களாக பாதுகாப்பான பணிச்சூழல், கண்ணியமான பதில்கள் மற்றும் சமமாக நடத்துதல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை முன்வைத்து, எங்களது கோரிக்கை மிகவும் எளிமையாகவே இருந்தது. ஆனாலும், இப்போது வரை அதற்கு விலையாக நாங்கள் மவுனத்தையும், விலகி இருப்பதையும் மட்டுமே சந்தித்தோம். இன்னும் சொல்லப்போனால், ஒரு காலத்தில் எங்கள் வீடாக கருதிய இடங்களிலிருந்து இப்போது நாங்கள் அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது, அதிகாரத்தின் முகங்கள் மாறுகின்றன. முறைகள் மாறுகின்றன. ஆனால், சமத்துவமின்மையை உருவாக்கும் கட்டமைப்புகள் மாற்றமின்றி அப்படியே தொடர்கின்றன. காலப்போக்கில் ஆணாதிக்கத்தாலும் அதிகார அரசியலாலும் சிதைக்கப்பட்டு, அதன் அடிப்படைக் கொள்கைகளை இழந்து பலவீனமடைந்துவிட்டன. இந்தச் சூழலில் நாங்கள் வெளியேறுவது தோல்வி அல்ல, இது எங்கள் சுயமரியாதைக்கான செயலாகும்.

இருப்பினும், நாங்கள் சந்தித்த அதே போராட்டங்களை அடுத்த தலைமுறைப் பெண்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாத இடமாக நடிகர் சங்கம் மாறும் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஏனெனில், ஏமாற்றங்களை முறியடித்து உயிர்வாழும் அபூர்வமான சக்தி நம்பிக்கைக்கு உண்டு என்று கூறியுள்ளனர்.

கடந்த வருடம் நடைபெற்ற மலையாள திரையுலகில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒரு பெண்ணே தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதால் நிச்சயமாகப் பெண்கள் சம்பந்தமான பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நடிகர் சங்கத்தில் இருக்கும் பெண்கள் பெரிய அளவில் நம்பினார்கள். ஆனாலும், சமீப நாட்களில் சங்கத்தில் இணைப் பொதுச் செயலாளராக இருக்கும் நடிகை அன்சிபா ஹாசன், சங்கத்தில் இருக்கும் இன்னொரு நிர்வாகியான நடிகர் டினி தாம் மூலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.

அதுமட்டுமல்ல, பொறுப்பில் இருக்கும் இன்னொரு சக நடிகையான லட்சுமி பிரியா, அன்சிபா மீது பொய்க் குற்றச்சாட்டுகள் கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்துத் துன்புறுத்திய நிகழ்வும் நடந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல், ஆதிக்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாகவே ஸ்வேதா மேனனும் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது. தற்போது ரேவதி மற்றும் பத்மபிரியா ஆகியோரின் விலகல், அதை உறுதிப்படுத்துவது போல அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !