உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கனவுலக கலைஞர்களின் கலையுலக அறிமுக ஆல்பம் “கல்லுக்குள் ஈரம்”

பிளாஷ்பேக்: கனவுலக கலைஞர்களின் கலையுலக அறிமுக ஆல்பம் “கல்லுக்குள் ஈரம்”


பாரதிராஜா தனது “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராக கலையுலகிற்கு அறிமுகமானதிலிருந்து அவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்தான் பி எஸ் நிவாஸ். “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “புதிய வார்ப்புகள்”, “நிறம் மாறாத பூக்கள்” என இயக்குநர் பாரதிராஜாவின் ஆரம்பகால திரைப்படங்களான இவற்றிற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர், “நிறம் மாறாத பூக்கள்” படத்தின் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், தானும் ஒரு படத்தை இயக்கப் போவதாக முடிவு செய்தார். அப்போது இயக்குநர் பாரதிராஜாவின் அறைத் தோழரும், “திருக்கல்யாணம்”, “திரிபுரசுந்தரி” ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்த இயக்குநருமான சந்திரபோஸ் என்பவரின் கதையான “கல்லுக்குள் ஈரம்” என்ற கதையை திரைப்படமாக எடுக்க முடிவெடுத்தார் பி எஸ் நிவாஸ்.

ஒரு ஒளிப்பதிவாளராகவே கலையுலகில் பயணித்து வந்த பி எஸ் நிவாஸ் இயக்குநர் அவதாரம் எடுக்க காரணமாக அமைந்த திரைப்படம்தான் இந்த “கல்லுக்குள் ஈரம்”. இக்கதையில் வரக்கூடிய இயக்குநர் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் பாரதிராஜாவையே நடிக்கும்படி அவர் வலியுறுத்த, பாரதிராஜாவும் அதற்கு செவி சாய்க்க, படப்பிடிப்பு ஆரம்பமானது. சினிமாவிற்குள் நுழையும் முன் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த இயக்குநர் பாரதிராஜாவின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் அவரையே நாயகனாக்கி, அழகு பார்த்த திரைப்படமாகவும் வெளிவந்ததுதான் இந்த படம். கதையின் நாயகனாக நடித்திருந்ததோடு, படத்திற்கு திரைக்கதை அமைத்து, டைரக்ஷன் மேற்பார்வையாளராகவும் பொறுப்பேற்றிருந்தார் இயக்குநர் பாரதிராஜா.

படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்கு தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்த அருணா முச்செர்லா என்ற ஒரு புது முகத்தை கதையின் நாயகியாக, இயக்குநர் பாரதிராஜாவின் ஜோடியாக அறிமுகம் செய்து வைத்தார் படத்தின் இயக்குநரான பி எஸ் நிவாஸ். பின்னாளில் இவர், “மகரந்தம்”, “சிவப்பு மல்லி”, “நீதி பிழைத்தது”, “பெண்ணின் வாழ்க்கை”, “நாடோடி ராஜா”, “ஆனந்த ராகம்”, “சட்டம் சிரிக்கின்றது”, “டார்லிங் டார்லிங் டார்லிங்”, “நன்றி மீண்டும் வருக”, “கேள்வியும் நானே பதிலும் நானே”, “முதல் மரியாதை”, “கரிமேடு கருவாயன்”, “பெண்மனி அவள் கண்மணி” என 25க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நாயகி, துணை நடிகை என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

இவரைப் போலவே பின்னாளில் தென்னிந்தியத் திரையுலகின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அறியப்பட்ட நடிகை விஜயசாந்தியும் ஒரு அறிமுக நாயகியாக அடையாளம் காணப்பட்டது இத்திரைப்படத்தின் மூலமே. அதன் பின்பு ரஜினி, கமல், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நாயகர்களோடு இணைந்து நடித்து பல வெற்றித் திரைப்படங்களைத் தந்திருக்கின்றார் நடிகை விஜயசாந்தி. குறிப்பாக 1990ம் ஆண்டு தெலுங்கில் இவர் நடித்த “கர்த்தவ்யம்” என்ற திரைப்படம், தமிழில் “வைஜெயந்தி ஐ பி எஸ்” என்ற பெயரில், ஒரு மொழி மாற்றுத் திரைப்படமாக வெளிவந்து, தமிழ் நாட்டிலும் பெரும் வெற்றியைப் பெற்று, ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக இவரை அடையாளப்படுத்தியது.

இவ்வாறு கலையுலகில் சிலரது ஆரம்பகால ஆசைகளுக்கும், அறிமுகங்களுக்கும் அஸ்திவாரமிட்ட ஓர் அழகிய ஆல்பமாக இன்றும் தமிழ் திரையுலகை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் இளையராஜா. “சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்”, “எண்ணத்தில் ஏதோ சில்லென்றது”, “கொத்தமல்லிப் பூவே புத்தம் புது காத்தே”, “தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே” போன்ற பாடல்கள் இன்றும் நாம் விரும்பிக் கேட்டு மகிழும் நமது விருப்பப் பாடல்களின் பட்டியலில் தனித்துவமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் இசைக் கோலங்கள் என்றால் அது மிகையன்று.

இத்தனைச் சிறப்புகளோடு, கனவுலக கலைஞர்கள் சிலரது கலையுலக அறிமுக ஆல்பமாக, மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த “கல்லுக்குள் ஈரம்” ரசிகர்களின் மனங்களை ஈரமாக்கி குளிரச் செய்யாமல் போனது துரதிர்ஷ்டமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !