பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”
1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் வர்த்தக ரீதியிலான அதிக வெற்றித் திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களில் குறிப்பிடும்படியான ஒருவர் என்றால் அது இயக்குநர் ப நீலகண்டன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எம் ஜி ஆர், சிவாஜி, எஸ் எஸ் ஆர் என அன்றைய முன்னணி நாயகர்கள் பலர் இவரது இயக்கத்தில் நடித்திருந்தாலும், இவர் எம் ஜி ஆரின் வெற்றிப்பட இயக்குநர் என்றே அடையாளப் படுத்தப்பட்டிருந்தவர்.
என் எஸ் கே நாடக சபாவை நடிகர் எஸ் வி சகஸ்ரநாமத்தின் மேற்பார்வையில் நடத்திக் கொண்டிருந்தபோது, நடிகர் டி கே சண்முகம் தங்களுக்காக “முள்ளில் ரோஜா” என்ற நாடகத்தை எழுதித் தந்த ப நீலகண்டனை நடிகர் எஸ் வி சகஸ்ரநாமத்தை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ள, அதன்படி தனது “தியாக உள்ளம்” என்ற நாடகத்தோடு நடிகர் எஸ் வி சகஸ்ரநாமத்தை சந்தித்தார் ப நீலகண்டன்.
அந்த நாடகத்தை “நாம் இருவர்” என்ற பெயரில் என் எஸ் கே நாடக சபா சார்பில் அரங்கேற்றினார் நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம். நடிகர் வி கே ராமசாமி, டி கே ராமச்சந்திரன் ஆகியோரும் பிரதான வேடங்கள் ஏற்று நடித்திருந்தனர். நாட்டில் விடுதலை வேட்கை கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சுதந்திர காலத்தில் மேடையேற்றிய இந்நாடகத்தில் மகாகவி பாரதியாரின் “அச்சமில்லை அச்சமில்லை”, “விடுதலை விடுதலை”, “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” போன்ற பாடல்களையும் நாடகத்தின் மிகப் பொருத்தமான இடங்களில் நடிகர் சகஸ்ரநாமம் இடம் பெறச் செய்திருந்தது நாடகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணமானது.
இந்தச் சூழலில் மகாகவி பாரதியாரின் பாடல்களுடன் “நாம் இருவர்” நாடகத்தை திரைப்படமாக்கினால், அது நிச்சயம் வெற்றி பெறும் என்ற உணர்வு மேலோங்கியவராக இருந்த ஏ வி மெய்யப்ப செட்டியார், நாடக ஆசிரியரான ப நீலகண்டனை அழைத்து வர ஏற்பாடு செய்தார். அப்போது புதுக்கோட்டையில் “கலைவாணி” என்ற பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்த ப நீலகண்டனும் ஏ வி மெய்யப்ப செட்டியாரை சந்தித்தார். உங்கள் கதையைப் படமாக்க விரும்புகிறேன். அந்தக் கதைக்காக உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும?; என ஏ வி மெய்யப்ப செட்டியார் கேட்க, அவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்ல, கேட்டத் தொகையை ஏ வி மெய்யப்ப செட்டியார் அவரிடம் தந்ததோடு, இந்தப் படத்திற்கு நீங்கள்தான் உதவி இயக்குநர் என்ற பொறுப்பினையும் வழங்கினார்.
பின்னர் சினிமாவிற்கு ஏற்றவாறு தனது நாடகக் கதையை எழுதித் தந்தார் ப நீலகண்டன். ஏ வி மெய்யப்ப செட்டியாரின் கணிப்புப்படி, படத்திலும் மகாகவி பாரதியாரின் பாடல்களை இடம் பெறச் செய்திருந்தது படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்ததாகவே அமைந்திருந்தது. 1947ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இந்த “நாம் இருவர்” திரைப்படம் வசூல் ரீதியாக பெறும் வெற்றியையும் பெற்றுத் தந்ததோடு, பின்னாளில் எம் ஜி ஆர், சிவாஜி, எஸ் எஸ் ஆர் போன்ற அன்றைய முன்னணி நாயகர்களின் வெற்றித் திரைப்படங்கள் பலவற்றை இயக்கிய இயக்குநராகவும், குறிப்பாக எம் ஜி ஆரின் கலையுலகப் பயணத்தில் அவரது இறுதி காலங்கள் வரை அதிக எண்ணிக்கையிலான அவரது திரைப்படங்களை இயக்கிய இயக்குநராகவும், எம் ஜி ஆரின் ஆஸ்தான இயக்குநர் என்ற பெருமைக்கும் உரியவராக இருந்ததற்கு காரணமாகவும், அடித்தளமாகவும் அமைந்ததுதான் இந்த “நாம் இருவர்” திரைப்படம்.