உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வாலி, இளையராஜா இணைவுக்கு அடித்தளமிட்ட “பத்ரகாளி”

பிளாஷ்பேக்: வாலி, இளையராஜா இணைவுக்கு அடித்தளமிட்ட “பத்ரகாளி”


தமிழ் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் 1960 மற்றும் 70களில் எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் செல்வாக்கு எந்த அளவிற்கு உயர்ந்திருந்ததோ, அதே அளவு செல்வாக்கும், ஒரு ஆரோக்கியமான போட்டியும் கொண்டிருந்த பாடலாசிரியர்கள்தான் கவியரசர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும். கவியரசர் கண்ணதாசனின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்திலேயே அவருக்கு நிகரான ஒரு போட்டியாளராக, அவருக்கெதிரே கடை விரித்து, கவி பாடி, களம் கண்ட கவிமகன்தான் வாலிபக் கவிஞர் வாலி.

விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே வி மகாதேவன், ஆர் சுதர்சனம், வி குமார், சங்கர் கணேஷ், போன்ற எண்ணற்ற தமிழ் திரையிசை ஜாம்பவான்களிடம் பணிபுரிந்திருக்கும் இவர், 'இசைஞானி' இளையராஜாவுடன் இணைந்து அதிக அளவில் பாடல்களைத் தந்த ஒரு தனிப்பெரும் கவிஞராகவே பார்க்கப்பட்டவர் கவிஞர் வாலி என்றால் அது மிகையன்று. அந்த வகையில் இவ்விருவரின் கூட்டணியில் வெளிவந்த முதல் திரைப்படம்தான் “பத்ரகாளி”.

இயக்குநர் ஏ சி திருலோகசந்தர் அலுவலகத்திற்கு ஒரு பாடல் கம்போஸிங் சம்மந்தமாக கவிஞர் வாலி அங்கு சென்றிருக்கின்றார். அலுவலகத்திற்கு வெளியே 'மெல்லிசை மன்னர்' எம் எஸ் விஸ்வநாதனின் கார் இல்லாததைக் கண்டு, தயாரிப்பு நிர்வாகியிடம் எம் எஸ் விஸ்வநாதன் இன்னும் வரவில்லையா? என்று கவிஞர் வாலி கேட்க, இல்லை, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த புது இயைமைப்பாளர் இளையராஜாதான் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றார் என்று தயாரிப்புத் தரபிப்பிலிருந்து பதில் வர, அங்கே ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்த இளையராஜாவைப் பார்த்த கவிஞர் வாலி, உங்களுக்கு கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி உண்டா? என கேட்க, ஏதோ ஓரளவு தேர்ச்சி உண்டு என்பது போல் இளையராஜாவும் பதிலளிக்க, தியாகராஜ கீர்த்தனைகள் தெரியுமா? என கவிஞர் வாலி மீண்டும் இளையராஜாவைப் பார்த்து கேட்டதோடு நில்லாமல், ஏதாவது பாடிக் காட்டும்படியும் கேட்டிருக்கின்றார்.

ஆர்மோனியப் பெட்டியை இசைத்தபடி, இசைஞானி இளையராஜாவும் தியாகராஜ கீர்த்தனை ஒன்றைப் பாடிக் காட்டியிருக்கின்றார். திருப்பதி கோயில் கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டு, திரையை விலக்கி தனக்கு தரிசனம் தருமாறு இறைவனை வேண்டி தியாகராஜ ஸ்வாமிகள் பாடிய தெலுங்கு கீர்த்தனையான “தெர தீயக ராதா” என்ற கீர்த்தனையைப் பாடிக் காட்டிய இசைஞானி இளையராஜாவைக் கண்டு தனது முதல் சந்திப்பிலேயே வியந்திருக்கின்றார் கவிஞர் வாலி. அதன் பின்னர் இவ்விருவரும் பாடல் கம்போஸிங்கில் இணைந்து தந்த முதல் பாடல்தான் “கேட்டேளே அங்கே அத பார்த்தேளா இங்கே” என்று ஆரம்பமாகும் “பத்ரகாளி” படப்பாடல்.

படத்தின் நாயகனும், நாயகியும் பிராமின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாடலிலும் அதன் சாயல் அழுத்தமாக இருக்க வேண்டும் என கவிஞர் வாலி பாடலில் “வாங்கோண்ணா அட வாங்கோண்ணா” என்ற வார்த்தைகளைச் சேர்க்க, அதையும் மிக அழகாக தனது மெட்டுக்குள் அடக்கி, பாடலை மிகப் பெரிய வெற்றிப் பாடலாக்கித் தந்திருப்பார் இசைஞானி இளையராஜா. இங்கே ஆரம்பித்த இவர்களது இன்னிசைப் பயணம் நான்கு தசாப்தங்களாக தொடர்ந்ததோடு, கவிஞர் வாலியின் ஐம்பதாண்டு கால திரையிசைப் பயணத்தில் மறக்க இயலாத எண்ணற்ற அவரது காவியப் பாடல்கள் பிறந்ததெல்லாம் 'இசைஞானி' இளையராஜாவோடு இணைந்து தந்தவை என்பது உலகறிந்த ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !