கஞ்சா வழக்கில் கைதான இயக்குனர் படத்தில் நடிப்பதா? மம்முட்டிக்கு நடிகர் ஹரீஷ் பெராடி கேள்வி
மலையாளத்தில் கடந்த 2019ல் மம்மூட்டி நடிப்பில் 'உண்ட' என்கிற திரைப்படம் வெளியானது. வெளி மாநிலத்தில் நக்சலைட்டுகள் நிறைந்த ஏரியாவில் நடக்கும் தேர்தலுக்காக கேரளாவிலிருந்து பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் காலித் ரகுமான் இயக்கியிருந்தார். இதையடுத்து இவர் டொவினோ தாமஸ் நடித்த 'தள்ளுமால, பிரேமலு' புகழ் நஸ்லேன் நடித்த 'ஆலப்புழா ஜிம்கானா' என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மம்மூட்டியை வைத்து 'மட்டாஞ்சேரி மாபியா' என்கிற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தமிழில் 'விக்ரம் வேதா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் ஹரீஷ் பெராடி, இயக்குனர் காலித் ரகுமான் டைரக்ஷனில் மம்முட்டி நடிப்பது குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். கடந்த வருடம் கேரளாவில் போலீசார் சோதனையின் போது, ஒரு ஒளிப்பதிவாளர் வீட்டில் இயக்குனர் காலித் ரகுமான் மற்றும் அவரது நண்பர் போதைப் பொருளான கஞ்சா பயன்படுத்தியதாக பிடிப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதனை குறிப்பிட்டு தான் கஞ்சா வழக்கில் கைதான ஒரு இயக்குனரின் படத்தில் மம்முட்டி எப்படி நடிக்கலாம்? ஒருவேளை போதை பொருளை மம்முட்டி ஆதரிக்கிறாரா என்று மக்கள் நினைக்க மாட்டார்களா ? எனக்கு தெரியவில்லை. எது சரி, தவறு என்று” என தனது முகநூல் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் ஹரீஷ் பெராடி.