உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மாநிலங்கள் கடந்தும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்த மாற்றுமொழி திரைப்படம்

பிளாஷ்பேக்: மாநிலங்கள் கடந்தும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்த மாற்றுமொழி திரைப்படம்

கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, இயக்கம், இசை, கதாபாத்திரங்களுக்கான கலைஞர்கள் தேர்வு மற்றும் அவர்களது பங்களிப்பு என ஒவ்வொன்றும் சரியாக அமையும் பட்சத்தில், ஒரு படத்தின் வெற்றிக்கு மொழி ஒன்றும் தடையில்லை என்பதற்கு சரியான உதாரணமாக வந்த திரைப்படம்தான் இந்தத் திரைப்படம். ஆக்ஷன் காட்சிகளோ, ஆர்ப்பாட்டமான செட் அமைப்புகளோ ஏதுமின்றி, அழகியலோடு கூடிய அற்புதமான ஒரு காதல் கதையைச் சொல்லி, மொழி கடந்து, மாநிலங்கள் கடந்து ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்த திரைப்படமான இத்திரைப்படத்தை இயக்குநர் கே பாலசந்தர் இயக்க, நடிகர் கமல்ஹாசன், சரிதா மற்றும் மாதவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து, நம் மனதிற்கு மிக நெருக்கமான ஓர் நெகிழ்வைத் தந்த “மரோ சரித்ரா” என்ற கருப்பு வெள்ளைத் தெலுங்கு திரைப்படம்தான் அது.

ஆந்திரவிலுள்ள விசாகபட்டினத்தில் வசிக்கும் ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், அவன் வீட்டின் அருகே குடியிருக்கும் தெலுங்குப் பெண்ணான நாயகியும் காதல் கொள்ள, இவ்விருவரின் காதலுக்கும் இருவீட்டாரிடமும் எதிர்ப்பு கிளம்ப, இந்த இளம் காதலர்கள் வாழ்க்கையில் இணைந்தனரா? எப்படி இணைந்தனர் என்ற ஒற்றை வரிக் காதல் கதையை மிக அழகாக திரையில் வடிவமைத்துக் காட்டியிருப்பார் இயக்குநர் கே பாலசந்தர். ஆந்திர மாநிலத்தில் மட்டும் 18 திரையரங்குகளில் 200 நாள்களைக் கடந்து ஓடி, மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தை தமிழிலும் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தார் இயக்குநர் கே பாலசந்தர்.

அப்போது “கோகிலா” என்ற பாலுமகேந்திராவின் கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியிருந்த நடிகர் மோகனைத்தான் இயக்குநர் கே பாலசந்தர் தான் எடுக்கப் போகும் “மரோ சரித்ரா” திரைப்படத்தின் தமிழ் பதிப்புக்காக நாயகன் கதாபாத்திரத்திற்கு தெரிவு செய்து வைத்திருந்தார். அதன் பின்னர் தெலுங்கு திரைப்படமான “மரோ சரித்ரா” திரைப்படமே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களில் தெலுங்கு மொழியிலேயே வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற, இயக்குநர் கே பாலசந்தர் தமிழில் இத்திரைப்படத்தை எடுக்கும் தனது முடிவையும் மாற்றிக் கொண்டார்.

அண்டை மாநிலமான கர்நாடகவின் பெங்களூருவில் 693 நாள்களும், மைசூரில் 350 நாட்களைக் கடந்தும், நம் தமிழ் நாட்டில் சென்னையிலுள்ள சபையர் திரையரங்கில் 593 நாள்களும், கிருஷ்ணவேனி திரையரங்கில் 175 நாட்கள் என எல்லை கடந்து, மொழி கடந்து ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்த ஒரு மாற்று மொழித் திரைப்படமாக இன்று வரை தென்னிந்திய திரையுலகமே கொண்டாடி மகிழும் திரைப்படம்தான் “மரோ சரித்ரா” என்ற இந்த தெலுங்கு மொழித் திரைப்படம்.

இயக்குநர் கே பாலசந்தரின் கதை மற்றும் இயக்கம், மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் இசை, என் ஆர் கிட்டுவின் படத் தொகுப்பு, கருப்பு வெள்ளையிலும் கடல் அலைகளை காதல் பேச வைத்த பி எஸ் லோக்நாத்தின் ஒளிப்பதிவு, கமல்ஹாசன், சரிதா, மாதவி போன்ற திரைக்கலைஞர்களின் பங்களிப்பு என ஒவ்வொன்றும் பார்ப்போரின் மனங்களைக் கொள்ளை கொண்டதால்தான் மொழி கடந்தும், மாநிலங்கள் கடந்தும் ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்திருந்தது இந்த “மரோ சரித்ரா”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !