உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கட்' செய்த காட்சிகளை இணைத்து வெப் சீரிஸ் ஆக துரந்தரை வெளியிட திட்டம்

'கட்' செய்த காட்சிகளை இணைத்து வெப் சீரிஸ் ஆக துரந்தரை வெளியிட திட்டம்


கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 1300 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனை அடுத்து சூட்டோடு சூடாக நான்கு மாத இடைவெளியிலேயே சமீபத்தில் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடம் இன்னும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த நான்கு நாட்களிலேயே 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

துரந்தர் படத்தின் முதல் பாகம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் விதமாகவும் இரண்டாம் பாகம் 3 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் விதமாகவும் வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஓடும் விதமாக காட்சிகள் எடுக்கப்பட்டு அவற்றில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் காட்சிகள் வெட்டி தனியாக எடுத்து வைக்கப்பட்டு மீதி படம் தான் இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளதாம்.

துரந்தர் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக ஓடி தனது ஓட்டத்தை நிறைவு செய்த பிறகு கையில் மீதி இருக்கும் இரண்டரை மணி நேர காட்சிகளையும் இந்த இரண்டு பாகங்களுடன் பக்காவாக இணைத்து கிட்டத்தட்ட 20 எபிசோடுகள் கொண்ட ஒரு வெப் சீரிஸ் ஆக வெளியிடும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. விடுபட்டுப் போன இந்த இரண்டரை மணி நேர காட்சிகளை பார்ப்பதற்காகவே இந்த இரண்டு பாகங்களையும் ரசித்த ரசிகர்கள் மீண்டும் இந்த வெப்சீரிஸை பார்க்க வருவார்கள் என்றும் அதன் மூலம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட லாபத்தை ருசிக்கலாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !