பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண் ஒரு பக்கம் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஜனசேனா என்கிற கட்சியை துவங்கி பல வருடங்களாக நடத்தி வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்து கொடுத்து வருகிறார். அதேசமயம் புதிய படங்களின் அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டார்.
அதேசமயம் பவன் கல்யாண் சினிமாவில் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் சினிமாவில் அவர் தனது அதிகார பயன்பாடுகளை துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க கூடாது என்றும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான விஜயகுமார் என்பவர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த மனுவின் மீது இறுதி விசாரணை நடத்திய நீதிமன்றம் பவன் கல்யாணுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மனுதாரர் கூறிய புகாரின்படி பவன் கல்யாண் தனிப்பட்ட எந்த ஒரு தொழிலில் ஈடுபடுவதையும் தடுக்க அதிகாரம் இல்லை என்றும் மேலும் மனுதாரர் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் பவன் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என்பதற்கு நீதிமன்றம் கிரீன் சிக்னல் காட்டியுள்ளது என்றே அர்த்தமாகிறது.