துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம்
இந்தியத் திரையுலகத்தில் 100 கோடி வசூல் என்பது ஒரு காலத்தில் பெரிய சாதனையாக இருந்தது. அதன்பின் அந்த சாதனை 500 கோடி, 1000 கோடி என உயர்ந்தது. தற்போது 1000 கோடி வசூலிக்கும் படங்கள் மாபெரும் பிரம்மாண்டமான வெற்றி என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்திய சினிமாவில் முதன் முதலில் 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படம் 1000 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது. இருந்தாலும் அப்படத்தின் மொத்த வசூல் சாதனை 1800 கோடியுடன் நின்றது.
2016ல் வெளிவந்த 'டங்கல்' திரைப்படம் சீன வெளியீட்டிற்குப் பிறகு 2000 கோடி வசூலைக் கடந்தது. அந்த சாதனையை இதுவரை வேறு எந்த ஒரு இந்திய மொழித் திரைப்படமும் முறியடிக்கவில்லை. அதற்குப் பிறகு “புஷ்பா 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, ஜவான், பதான்,” ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் சாதனையைப் புரிந்தன.
இரண்டு பாகங்களாக வெளியான படங்களில் 'பாகுபலி, கேஜிஎப், புஷ்பா' ஆகிய படங்களின் இரண்டாவது பாகப் படங்கள்தான் 1000 கோடி வசூலைக் கடந்தன. ஆனால், அவற்றின் முதல் பாகப் படங்கள் அந்த வசூல் சாதனையைப் புரியவில்லை.
அதேசமயம் கடந்த வருடம் 2025ல் வெளிவந்த 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் 1000 கோடி வசூலையும், கடந்த வாரம் வெளிவந்த அதன் இரண்டாம் பாகம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் 1000 கோடி வசூலையும் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை இரண்டு பாகங்களாக வெளிவந்த எந்த ஒரு படமும் இந்த சாதனையைப் புரிந்ததில்லை.
'துரந்தர் 2' படத்தின் இரண்டாம் பாகத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகப் படங்களில் அதிக வசூலைக் குவித்த 'பாகுபலி 2' படத்தின் வசூலான 1800 கோடியை அது கடந்து மற்றொரு சாதனையைப் புரியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1000 கோடி வசூலைக் கடந்த இந்தியத் திரைப்படங்கள்… (அதிகாரப்பூர்வமற்ற பாக்ஸ் ஆபீஸ் தகவல்)
2000 கோடி - டங்கல்
1800 கோடி - பாகுபலி 2
1700 கோடி - புஷ்பா 2
1400 கோடி - துரந்தர்
1300 கோடி - ஆர்ஆர்ஆர்
1200 கோடி - கேஜிஎப் 2
1100 கோடி - ஜவான்
1100 கோடி - கல்கி 2898 எடி
1050 கோடி - பதான்
1042 கோடி - துரந்தர் 2 (படம் ஓடிக் கொண்டிருக்கிறது, 7 நாளில் இந்த வசூல்)