தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே….
2026ம் ஆண்டின் மூன்றாவது மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இன்று. இந்த மாதத்தில் வெளியாகும் படங்கள் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று வெளியான 4 தமிழ்ப் படங்களுடன் சேர்த்து, இந்தாண்டில் இதுவரை வெளியான படங்களின் எண்ணிக்கை 67ஐ தொட்டுள்ளது.
இத்தனை படங்களில் அனைத்து தரப்பிற்கும் லாபத்தைக் கொடுத்த படங்கள் என்று பார்த்தால் 4 படங்கள் மட்டுமே அப்படி அமைந்துள்ளன என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். ஜனவரி மாதத்தில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்', பிப்ரவரி மாதத்தில் வெளியான 'வித் லவ்', அம்மாதக் கடைசியில் வெளியான 'தாய் கிழவி', மார்ச் மாதத்தில் கடந்த வாரம் வெளியான 'யூத்' ஆகிய படங்களை மட்டுமே குறிப்பிட வேண்டும்.
பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'பராசக்தி' படம் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் படம் லாபரகமாக அமையவில்லை. அந்தப் படத்தின் வசூல் மற்றும் மேலே குறிப்பிட்ட 4 படங்களின் வசூல் ஆகியவற்றைச் சேர்த்தாலும் வசூல் 285 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதர சில முக்கிய படங்களின் வசூலைச் சேர்த்தால் அது 300 கோடியைக் கடந்திருக்கும்.
மூன்று மாதங்களாகியும் ஏதாவது ஒரு படம் 100 கோடி வசூலைக் கடந்து, அது லாபத்தையும் கொடுத்தது என்ற கணக்கு இன்னும் ஆரம்பமாகவில்லை என்பது மோசமான உண்மை.