உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு

'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு

கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு 'காந்தாரா' படம் பற்றி பேசினார். அப்போது அவர் படத்தில் தெய்வத்தை கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்டார். அதோடு தெய்வத்தை பெண் பேய் என்றும் விமர்சித்தார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் ரன்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் சி.ஜி.மலையாளி, நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எழுத்துபூர்வமான மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் தரப்பு தயார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் சி.ஜி.மலையாளி, ''ரன்வீர் சிங் நேரடியாக வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். வழக்கறிஞர் குழு மூலம் மன்னிப்பு கேட் பதை ஏற்க கூடாது'' என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம் “கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. சாமுண்டி மலைக்கு வந்து தெய்வத்தை வணங்கி, மன்னிப்பு கேட்கட்டும். அதன்பிறகு வழக்கை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்றது. இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கும் என்று அறிவித்தது.

இந்த வழக்கில் அறியாமல் செய்த பிழைக்காக மன்னிப்பு கேட்ட பிறகும், எழுத்துபூர்வமான மன்னிப்புக்கு தயாரானபோதும் கர்நாடக உயர்நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்வதால் உச்சநீதி மன்றத்தை நாட ரன்வீர் சிங் தரப்பு முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !