அப்பா, அண்ணனுக்காக பேசுவாரா தனுஷ்?
தான் நடிக்கும் படங்கள் தவிர, மற்ற படங்களின் பாடல் வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழாக்களில் தனுஷ் அதிகம் கலந்து கொள்வதில்லை. படம் இயக்கம், நடிப்பில் பிஸியாக இருப்பதால் அதை தவிர்ப்பார். தனது இயக்கத்தில், அக்கா மகன் பவிஷ் நடித்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால், கென் நடித்த 'யூத்' பட விழாவில் கலந்து கொண்டு எனக்கு கென் மகன் மாதிரி என வாழ்த்தினார்.
இந்நிலையில் செல்வராகவன் கதைநாயகனாக நடித்த 'மனிதன் தெய்வமாகலாம்' படம் அடுத்த வாரம் ரிலீஸ். நாளை படத்தின் பாடல் வெளியீட்டு விழா. இதில் தனுஷ் கலந்துகொள்வாரா அல்லது அண்ணன் நடித்த படம் என்பதால் ஏதாவது வீடியோ வெளியிடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் அவர் அப்பாவும், இயக்குனருமான கஸ்துாரி ராஜா நடித்த 'ஹபீபீ' என்ற படமும் கோடையில் வருகிறது. அந்த படத்துக்கும் தனுஷ் ஏதாவது பேசுவாரா? விளம்பர வகையில் உதவுவாரா என கேள்வி எழுந்துள்ளது.