லாபத்தில் பங்கு: முதல் படத்தில் கென்னுக்கு அடித்த அதிர்ஷ்டம்
'தாய் கிழவி' படத்துக்கு வியாபாரத்தில், லாபத்தில் இத்தனை சதவீதம் சம்பளம் என்ற புதிய முறையில் சம்பளம் வாங்கினார் ராதிகா. அதேபோல், 'யூத்' படத்துக்கும் இயக்குனர், ஹீரோவான கென் சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல். இதை சென்னையில் நடந்த யூத் பட நன்றி அறிவிப்பு விழாவில் மறைமுகமாக சொன்னார் படத்தின் தயாரிப்பாளர் கருப்பையா.
''கென் கருணாசின் ஸ்ட்ரீட் பாய்ஸ் என்ற நிறுவனம் எங்கள் கம்பெனியுடன் இணைந்துள்ளது. படத்தின் வெற்றியில் அவருக்கும் பங்கு இருக்கிறது. அடுத்து வரும் படங்களிலும் இந்த அடிப்படையில் இயக்குனரை புக் செய்வோம்'' என்றார் தயாரிப்பாளர். யூத் படம் 50 கோடிக்கும் அதிகமான அளவில் வசூல் ஆகியிருக்கும் நிலையில், கணிசமான சம்பளத்தை கென் பெற்று இருக்கிறார். இது எந்த முதல் பட ஹீரோ, இயக்குனருக்கும் கிடைக்காத வாய்ப்பு என்று கூறப்படுகிறது. அடுத்து 'யூத் 2' எடுப்பாரா? வேறு கம்பெனிக்கு படம் பண்ணுவாரா அல்லது சொந்த படமா என்பதை இன்னமும் கென் முடிவு செய்யவில்லையாம்.