உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தணிக்கைக் குழுவினரால் வெற்றியைத் தவறவிட்ட “காஞ்சித் தலைவன்”

பிளாஷ்பேக்: தணிக்கைக் குழுவினரால் வெற்றியைத் தவறவிட்ட “காஞ்சித் தலைவன்”


எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த அவரது ஆரம்பகால ராஜா ராணி திரைப்படங்களில் முக்கியமான ஒரு திரைப்படமாகப் பார்க்கப்படுவதுதான் “காஞ்சித் தலைவன்” என்ற திரைப்படம். ஆரம்பத்தில் “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்” தயாரிப்பதாக இருந்த இத்திரைப்படம், அவர்களால் கைவிடப்பட்டிருந்த நிலையில், கலைஞர் மு கருணாநிதி, இயக்குநர் ஏ காசிலிங்கம், முரசொலி மாறன் ஆகிய மூவர் பங்குதாரர்களாக இருந்து வந்த “மேகலா பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்க ஏற்பாடாகியது.

படத்தின் கதை, திரைக்கதையை மு கருணாநிதியும், இயக்கத்தை இயக்குநர் ஏ காசிலிங்கமும், தயாரிப்பு மேற்பார்வை பொறுப்பை முரசொலி மாறன் அவர்களும் ஏற்று படப்பிடிப்பும் ஆரம்பமானது. படப்பிடிப்பு துவக்க விழாவில் திரையுலக பிரமுகர்களும், நடிகர்களும் கலந்து கொள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் சி என் அண்ணாதுரை அவர்களும், மறைந்த 'ஜெமினி ஸ்டூடியோ' அதிபர் எஸ் எஸ் வாசன் அவர்களும் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றி படப்பிடிப்பையும் துவக்கி வைத்தனர்.

படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்த வேளையில், 1962ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மு கருணாநிதி அவர்களைத் தவிர, மற்ற பதினான்கு இடங்களில் போட்டியிட்ட கட்சித் தலைவர்கள், அறிஞர் அண்ணா அவர்கள் உட்பட அனைவரும் வெற்றி வாய்ப்பைத் இழக்க நேரிட்டு, பின் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, மு கருணாநிதி அவர்கள் எதிர்கட்சித் தலைவராகி, வெற்றி பெற்ற தனது சட்டமன்ற சகாக்களோடு சட்டசபை சென்று கொண்டிருந்த வேளையில், “காஞ்சித் தலைவன்” படப்பிடிப்பில் ஒரு சிறு சுனக்கமும் ஏற்பட்டது.

பின்னர் படத்தின் இயக்குநர் ஏ காசிலிங்கம் அவர்களின் விடாமுயற்சியால் “காஞ்சித் தலைவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முடிவுற்றிருந்த நிலையில், படம் தணிக்கைக்குச் சென்றது. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் படத்தில் சில இடங்களில் வசனம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனை மறுத்து தயாரிப்புத் தரப்பு தணிக்கைக் குழு அதிகாரியோடு பல மணிநேரம் வாதங்கள் செய்தும், இறுதியாக 'வெல்க காஞ்சி' என்ற வசனத்தை 'வெல்க நாடு' என மாற்றி அமைத்திடவும், சில குறிப்பிட்ட வசனங்களை நீக்கிவிடவும், படத்தின் இறுதிக் காட்சியில் இடம் பெற்ற பாடலான “வெல்க காஞ்சி, வெல்க காஞ்சி வெல்க வெல்கவே வீர முரசொலியைக் கேட்டு வெல்க வெல்கவே” என்று மு கருணாநிதி அவர்கள் எழுதிய பாடலை “வெல்க நாடு, வெல்க நாடு வெல்க வெல்கவே, வீர சங்கநாதம் கேட்டு வெல்க வெல்கவே” என மாற்றம் செய்யப்பட்டு, பின் தணிக்கைக் குழு அதிகாரிகளுக்கு படத்தைப் போட்டுக்காட்டி, அவர்களது ஒப்புதலோடு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டது “காஞ்சித் தலைவன்” திரைப்படத்திற்கு.

நரசிம்ம வர்மனாக எம் ஜி ஆர், சோழ குமாரியாக பி பானுமதி, தளபதி பரஞ்ஜோதியாக எஸ் எஸ் ராஜேந்திரன், பூங்குழலியாக சி ஆர் விஜயகுமாரி, புலிகேசியாக எஸ் ஏ அசோகன், பூவிக்ரமனாக எம் ஆர் ராதா மற்றும் ஜி சகுந்தலா, மனோரமா, டி ஏ மதுரம் என ஒரு பெரும் நட்சத்திர திரளே நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 26.10.1963 தீபாவளித் திருநாளன்று வெளியான இந்தக் “காஞ்சித் தலைவன்” திரைப்படம் தயாரிப்புத் தரப்பினருக்கு மட்டுமின்றி எம் ஜி ஆருக்கும் வசூல் ரீதியிலான ஒரு தோல்விப் படமாகவே அமைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !