வேலுாரில் நடந்த உண்மை சம்பவம்: 'கர' குறித்து இயக்குனர் பேட்டி
சரத்குமார், அசோக்செல்வன் நடித்த 'போர்த்தொழில்' படத்தை இயக்கியவர் விக்னேஷ்ராஜா. அவரின் அடுத்த படம் 'கர'. தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ்வெஞ்சரமுடு, மமிதாபைஜூ உட்பட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 30ல் படம் ரிலீஸ்.
'கர' குறித்து இயக்குனர் கூறுகையில், ''நானும், என் நண்பர் ஆல்பிரட் இணைந்து இந்த கதையை எழுதியுள்ளோம். சில உண்மை சம்பவங்களின் பின்னணியில் கதை உருவானது. 1990களில் வேலுாரில் நடந்த ஒரு விஷயத்தை பேப்பரில் படித்தேன். அது தாக்கத்தை ஏற்படுத்த 'கர' கதையை டெவலப் செய்தோம். ராமநாதபுரத்தில் கதை நடப்பது போல மாற்றியிருக்கிறோம். கர என்ற தலைப்புக்கு பல விமர்சனங்கள் வந்தன. என் நண்பனின் சித்தப்பா பெயர் கர. பல ஊர்களில் கரசாமி பெயர் வழக்கு இருக்கிறது.
முதன்முறையாக கொஞ்சம் க்ரே ஷெடில் தனுஷ் நடிக்கிறார். அதாவது, நெகட்டிவ் கலந்த கேரக்டர். முதலில் இந்த கேரக்டர் இன்னும் கறுப்பாக இருந்தது. திரைக்கதை படித்து பார்த்த தனுஷ் சில விஷயங்களை சொன்னார். அதனால், அந்த கேரக்டர் தன்மையை மாற்றினோம். மமிதா பைஜூ வழக்கமான ஹீரோயின் கிடையாது. கதையில் நாலைந்து கேரக்டர்கள் முக்கியத்துவம் பெறும். அதில் அவரும் ஒருவர். ராமநாதபுரத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அந்த வறண்ட பகுதி எங்களுக்கு தேவைப்பட்டது. நாங்கள் சென்ற நேரம் ராமநாதபுரத்தில் மழை வெளுத்து வாங்கியது. அதனால்,கொஞ்ச காலம் காத்திருந்து படப்பிடிப்பு நடத்தினோம்'' எனக் கூறினார்.