நான் பேசினாலே பிரச்னை தான் : ‛தர்மன்' பட அறிமுக விழாவில் ரஜினி பேச்சு
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது பட அறிவிப்பு சென்னையில் நடந்தது. படத்திற்கு தர்மன் என பெயரிட்டுள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். சிம்ரன், ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
பட விழாவில் பேசிய ரஜினி, ‛‛நான் பேசினாலே பிரச்னை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள். பேசினால் இதோ பேசிட்டாரு என அதற்கும் ஒரு பிரச்சனை செய்வார்கள். ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்.
4வது இயக்குனர் அஸ்வத்
இந்த படத்திற்கு நான்காவது இயக்குனர் அஸ்வத். முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர் சி, அதன்பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி கடைசியாக அஸ்வத் இயக்க உள்ளார். சிபி சொன்ன கதை பிடித்திருந்தது. ரொம்ப சென்சிட்டிவ் சப்ஜெக்ட். அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம், அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைச்சுட்டோம்.
கமல் தந்த பொறுப்பு
கதையை நான் கேட்கல, நீங்களே கேட்டு சொல்லுங்க என கமல் சொன்னார். படத்தில் எல்லா பொறுப்புகளையும் கமல் என்னிடம் கொடுத்துவிட்டார். அதுவே கொஞ்சம் பயமாக இருந்தது. இந்த கதையெல்லாம் வேண்டாம் கமல், நீங்களும் கதை கேட்டு ஓகே சொல்லுங்க என்றேன். அஸ்வத் மீது பெரிய பொறுப்பு இருக்கு. அதற்காக அவரை மட்டும் சொல்லவில்லை. இது ஒரு கூட்டு முயற்சி. படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரின் டிராகன் படம் பிடித்திருந்தது. அதில் நல்ல மெசேஜ் இருந்தது.
கமல் உடனான நட்பு
கமல் உடனான நட்பு பற்றி சொல்லவே தேவையில்லை. 1975களில் கமல் பெரிய ஸ்டார். நான் அந்த சமயம் தான் வந்தேன். ‛இளமை ஊஞ்சலாடுகிறது' படம் கமலால் தான் பண்ணினேன். அதில் முதலில் ஜெய் கணேஷ் நடிக்க வேண்டியது. கமல் தான் நான் நடிக்க வேண்டும் என ஸ்ரீதரிடம் பேசி நடிக்க வைத்தார். படத்தில் நான் செய்த மேனரிசங்களை பாராட்டியவர் கமல். அவர் செய்த உதவியாகட்டும், ஊக்கமாகட்டும் சொல்ல முடியாதவை''.
இவ்வாறு ரஜினி பேசினார்.