உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சினிமாவில் நடித்த பாமக நிறுவனர் ராம்தாஸ்

பிளாஷ்பேக்: சினிமாவில் நடித்த பாமக நிறுவனர் ராம்தாஸ்


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் 'பாலம்' என்ற படத்தில் ராமதாஸாகவே தோன்றினார். 'பாலம்' படம் 1990ம் ஆண்டு வெளிவந்தது. சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை கார்வண்ணன் இயக்கியிருந்தார். முரளி, எம்.என். நம்பியார், கிட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் இத்திரைப்படத்தில் அரசியல்வாதியாக, வில்லன் பாத்திரத்தில் அறிமுகமானார். என்.எஸ்.டி.ராஜேஷ். இசை அமைத்திருந்தார்.

வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் அதற்கு காரணமான அமைச்சரை கடத்தி ஒரு பாலத்தில் பிணை கைதியாக வைத்திருப்பது மாதிரியான கதை. பெரும்பாலான காட்சிகள் பாலத்திலேயே படமாக்கப்பட்டது. இளைஞர்களுக்கு ஆதரவாக ராமதாஸ் குரல் கொடுப்பதாக அவரது காட்சி இருந்தது. டாக்டர் ராமதாஸ், திரைப்படத் துறைக்கு எதிரானவர், அவர் ஒரு படத்தில் தோன்றியது அப்போது விமர்சிக்கப்பட்டது.

1995ல் வெளியான 'தொண்டன்' படத்தில் அவர் டாக்டர் சஞ்சீவி ராமன் என்ற டாக்டராக நடித்திருந்தார். இந்த படத்தையும் கார்வண்ணன் இயக்கி இருந்தார். இரண்டு படங்களிலும் முரளி கதாநாயகனாக நடித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !