உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆளுமை உரிமை பாதுகாப்பு பெற்ற அல்லு அர்ஜுன்

ஆளுமை உரிமை பாதுகாப்பு பெற்ற அல்லு அர்ஜுன்

இன்றைய ஏஐ யுகத்தில் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என சினிமா பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடி ஆளுமை உரிமை பாதுகாப்பைப் பெற்று வருகிறார்கள்.

இதற்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், ஹிந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், அக்ஷய்குமார், சல்மான் கான், அபிஷேக் பச்சன், மாதவன், இயக்குனர் கரண் ஜோஹர், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ்பாபு, நாக சைதன்யா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் இப்படி தங்களது 'ஆளுமை உரிமை'யைப் பெற்றுள்ளார்கள்.

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனும் தற்போது ஆளுமை உரிமை பாதுகாப்பைப் பெற்றுள்ளார். இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவுக்கு இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுனின் பெயர், உருவம், குரல், உரையாடல் பாணி, சைகைகள், உடைகள், பேச்சு, கையொப்பம் மற்றும் ஒற்றுமை ஆகியவை இதன் மூலம் பாதுகாக்கப்படும்.

சமீபத்தில் ஏஐ மூலம் அல்லு அர்ஜுனின் குரல் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்தே அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !