கடைசி நாளில் மகனுக்காக ஓட்டுக்கேட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தேர்தலை சந்திக்கிறது. விஜய்க்கு அரசியல் ஆசையை தூண்டியதே அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஆனால் பின்னாளில் பலர் விஜய்யின் பக்கத்தில் நெருங்கியதால் அவர் ஓரங்கட்டப்பட்டார். கட்சி துவக்க நாளில் மட்டும் விஜய் தனது தாய், தந்தையிடம் ஆசி பெற்று கட்சி தொடங்கினார். ஆனால் அதற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
விஜய் தேர்தல் பிரசாரம் செய்தபோதும் எஸ்.ஏ.சி மகனுக்காக பிரசாரம் செய்யவில்லை. பிரசாரத்திற்கு அவர் அழைக்கப்படவும் இல்லை. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று மகனுக்கு ஓட்டுக் கேட்டு எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது: என் அன்பு மகன் விஜய், உங்கள் தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் உறவுகளுக்கு என் வணக்கம். தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு மாற்றத்துக்கான ஒரு நாள் வரப்போகிறது. அது உண்மையான ஒரு மாற்றம். அதற்காகப் பல பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த இயக்கத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக உழைக்கக்கூடிய, போராடக்கூடிய ஒரு இளைஞன் வருகிறார். எத்தனையோ தடைகள், எல்லாவற்றையும் தாண்டி வந்துகொண்டிருக்கிறார். ஒரு தொண்டனாக உங்களுக்குத் தலைமை ஏற்க வந்திருக்கிறார்.
இந்தத் தேர்தல், வழக்கமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கின்ற தேர்தலாக மட்டும் பார்க்காதீர்கள். இது ஒரு மாற்றம், ஒரு எழுச்சி, ஒரு மவுனப் புரட்சி. அந்தப் புரட்சி மவுனமாக, கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு புரட்சி. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க வேண்டும் என்று பலருடைய கனவு. அந்தக் கனவை நிறைவேற்றக்கூடிய நாள் ஏப்ரல் 23. அந்தப் புரட்சி, அந்த மாற்றம் நடக்க வேண்டும் என்றால், உங்களுக்குள்ளே ஒரு விரல் புரட்சி நடக்க வேண்டும். அந்த ஒரு விரல் 'விசில்' . இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.