உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் 100 எபிசோட்களை கொண்ட வெப் தொடர்: தமிழில் வெளியாகிறது

மீண்டும் 100 எபிசோட்களை கொண்ட வெப் தொடர்: தமிழில் வெளியாகிறது


பொதுவாக தொலைக்காட்சி தொடர்கள் 1000 எபிசோட்கள் தாண்டிகூட வந்திருக்கிறது. ஆனால் வெப் தொடர்கள் பெரும்பாலும் சீசனுக்கு 10 எபிசோட்கள் வரும், 10 சீசன்கள்கூட வரும். ஆனால் ஒரே சீசனில் 100 எபிசோட்களாக ஓரிரு வெப் தொடர்களே வந்துள்ளது. 'ஹார்ட்பீட் (100 எபிசோட்), உப்பு புளி காரம் (128 எபிசோட்), போலீஸ் போலீஸ் (100 எபிசோட்)' போன்ற வெப்தொடர்கள் வந்துள்ளன. அந்த வகையில் அடுத்ததாக 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' என்ற வெப் தொடர் தமிழில் தயாராகி உள்ளது.

'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரை தயாரித்த நிறுவனமே இந்த தொடரையும் தயாரித்துள்ளது. 'உப்பு புளி காரம்', 'போலீஸ் போலீஸ்' போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்த்ரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அடுத்த மாதம் முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் குறித்து இயக்குனர் கூறியதாவது: இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி வரும் போஸ் வெங்கட் கட்டுப்பாடான குடும்ப தலைவர். குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி நடித்துள்ளார்.

மென்மையான உணர்வுகள், நகைச்சுவை என அனைத்து தரப்பினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும்படி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதையில் நான்கு உடன்பிறந்தவர்களின் தனித்தனி தொழில், குணநலன் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை சமாளிக்கும் விதத்தையும், குடும்ப பிணைப்பால் ஒன்றிணைந்திருக்கும் உறவுகளையும் மையமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரின் எபிசோட் வெளியாகும். குடும்ப மதிப்புகள் மற்றும் சமகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்தொடர், பார்வையாளர்களுக்கு ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதையை வழங்க இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !