தெலுங்கில் வாழ 2 ரிலீஸ் : ராம்சரணை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் வாழ 2 திரைப்படம் வெளியானது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றியை பெற்ற வாழ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருந்தது. முதல் பாகத்தை விட மிகப்பெரிய வரவேற்பை பெற்று 200 கோடி வசூலித்து தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வாழ 2 திரைப்படம் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகி உள்ளது.
இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் வந்த படக்குழுவினர் ஏற்கனவே நடிகர் ஞானியின் மூலம் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். இதனையடுத்து ஐதராபாத்தில் நடிகர் ராம்சரணை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளனர் வாழ 2 படக்குழுவினர். படத்தின் தயாரிப்பாளரான பிரபல மலையாள இயக்குனர் விபின் தாஸ் ஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் உள்ள பிரபலங்களுடன் நெருங்கிய நட்பில் உள்ளவர் என்பதால் நானி மற்றும் ராம்சரண் ஆகியோர் இந்த படத்தின் புரமோஷன்களில் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.