மே 2ல் வேலைநிறுத்தம்: வருவாய் பகிர்வுக்கு நடிகர்கள் முன்வர வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் முடிவு
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூடியது. இதில் முக்கியமான சில முடிவுகள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள்:
* சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியத்தொகை கடந்த 10 ஆண்டுகளாக வழங்காமல் நிலுவையில் உள்ளது. அந்த மானியத் தொகையினை புதியதாக பதவியேற்க இருக்கும் தமிழக அரசு உடனடியாக வழங்கிட வழிவகை செய்திட வேண்டும் எனத் தீர்மானம்.
* தமிழ் சினிமாவில் தற்போது ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆந்திரா மாநிலத்தில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் வருவாய் பகிர்வு முறையில் தமிழகத்தில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படம் நடிக்க வேண்டும்.
* தயாரிப்பாளர்களின் நஷ்டங்களில் நடிகர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழுவில் முடிவெடுத்து நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இனி மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வருவாய் பகிர்வு முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
* இந்த விஷயத்தினை சினிமாத்துறையில் உள்ள அனைவரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும், தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால் தொடர் வேலை நிறுத்தம் செய்யவும் தீர்மானம்.
* திரைப்படங்களை 8 வாரங்களுக்கு ஓடிடி.,யில் வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்களை நிர்பந்திப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றினைந்து மே 10ல் கலந்தாய்வு கூட்டம் நடத்தவுள்ளார்கள்.
* தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள். சங்கத்திற்கு தெரியாமல் ஓடிடி சம்பந்தமாக கடிதம் அளித்தார்கள் என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தமிழ்த் திரையுலகம் தொழில் ஒத்துழைப்பு வழங்காது என்று தீர்மானம்.
இந்த பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுவது வருவாய் பகிர்வு விஷயம். அதன்படி, நடிகர்கள் வருவாய் பகிர்வு முறையில் படங்களில் நடிக்க முன்வர வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மே 2ல் அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும், வருவாய் பகிர்வு விஷயத்தில் நடிகர் சங்கம் முடிவெடுக்கவில்லை எனில், வேலைநிறுத்தத்தை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.